பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

99


'பின்னே என்ன? நன்றிகெட்ட முறையில் செயல் புரிகிறவளை எப்படி மன்னிப்பது? உள்ளதைச் சொன்னால் உன்னைச் சும்மா விட்டுவிடுவேன்' என்றாள் அமுதம்.

கிழவி நடுங்கியவாறே எழுந்து நின்று அவளைக் கையெடுத்துக் கும்பிட்டாள். 'அம்மா! என்னை மன்னித்து விடுங்கள். என் மகன் என்ற பாசம் என்னை ஆட்டி வைக்கிறது. அவன் பசியால் வாடி வதங்கக் கூடாதே என்ற தாய்மை உணர்ச்சியால்தான் நான் அவனுக்கு அடிக்கடி உணவு கொண்டு கொடுக்கிறேன்; அவனை இங்கிருந்து ஓடிப் போகும்படியும் நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்.'

'வீண் கதையெல்லாம் ஏன்? அவன் என்ன குற்றம் செய்துவிட்டு இப்படித் தலை மறைவாக வசிக்கிறான்?'

கிழவி கண்களைத் துடைத்துக்கொண்டாள், விம்மினாள். 'அவன் இதுவரை குற்றம் எதுவும் செய்யவில்லை அம்மா' என்று முனங்கினாள்.

'பின்னே?' அமுதவல்லிக்குச் சினம் மூண்டெழிந்தது என்பதை வெடித்து உருண்ட அந்த ஒற்றைச் சொல்லே எடுத்துக் காட்டியது.

கிழவி அவள் முகத்தைப் பரிதாபமாக நோக்கினாள். குழி விழுந்த கண்களில், ஒளி இழந்து கொண்டிருக்கும் சுடர்கள்போல், ஒடுங்கிக் கிடந்த விழிகள் அங்கு நின்றோர் அனைவரையும் தொட்டன; பின் அன்னக்கிளி மீது படிந்தன. அவளை வீட்டுப் பார்வையை எடுக்காமலே கிழவி சொன்னாள் (எல்லாம் இந்தப் பெண்ணாலேதான்? என்று.