பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

5

மருது பாண்டியன் குறுநகை சிதறி, 'எனக்குக் கிரக்கம் தரும்படியாக எதுவும் நிகழவில்லை. நான் மயங்கி விழவுமில்லை’ என்றான்,

'நிலவைக் கண்டாயா நண்பா?'என்று கேட்டான் திருமலை.

மருது சிரித்தவாறே சொன்னான். 'பஞ்சாங்கத்தின்படி இன்று அமாவாசை அல்லவா! நிலவை நான் எங்கு தேட?'

'பலகணியின் பின்னே தெரிந்ததே பெளர்ணமி நிலவு, அதைச் சொல்கிறேன்.'

'ஓ, அதுவா?' என்ற மருது பாண்டியன் விஷமப் பார்வை சிந்தி, விளையாட்டாகப் பேச்சு உதிர்த்தான்.'செறிந்து கிடந்த கருமேகக் கூட்டத்தைக் காணும் பேறு தான் நான் பெற்றேன்!'

'குத்துகின்ற வைரக்கதிர்களை எறிந்த ஒளி மீன்களை நீ காண வில்லை?’ என்று வினவினான் தோழன்.

'ஊகுங். உருகிப்பாய்ந்த ஒளிக்கோடுகளை ஏற்று நின்ற பசிக் கண்களைத்தான் பார்த்தேன். அவை திருமலையின் உடமை என்றும் உணர்ந்தேன்’ என்று மருது அருவிச் சிரிப்பை அள்ளி தெளித்தான்.

திருமலைக்கொழுந்து நகைத்தான். 'வேடிக்கை போதும், மருது. அவள் யாராக இருக்கும்' என்று கேட்டான்.

உன்னைப்போல.நானும் இந்த ஊருக்குப் புதியவன்தான் பாண்டியா!' என்று குறும்பாகச் சொன்ன மருது, குதிரையைத் தட்டிவிட்டான். தூள் எழுப்பிப் புழுதியைப் பறக்க விட்டுப் பாய்ந்து முன்னேறியது புரவி.

திரும்பி நோக்கி வெறும் சாளரத்தைக்கண்டு ஏமாந்து தன் குதிரையையும் விரட்டி நண்பனைத் தொடர்ந்தான் திருமலைக்கொழுந்து.