பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அன்னக்கிளி


மோதுவதுபோல் ஒரு குதிரை குறுக்கிட்டது. 'யாரது? சாகவேண்டும் என்றே வீட்டிலிருந்து கிளம்பினாயா?' என்று அதட்டிய குரல், நேரவிருந்த விபத்து தந்த அதிர்ச்சியோடு மற்றோர் அதிர்ச்சியாக அவளை உலுக்கியது. அவள் முகம் முக்காடிட்டிருந்த துணிக்கு நடுவிலிருந்து வெளிறிய பகல் வேளைச் சந்திரன்போல் நிமிர்ந்து நோக்கியது.

'ஆ, அன்னம்! நீயா?" என்றான் திருமலைக் கொழுந்து. மிகுந்த திறமையோடு அவன் குதிரையை இழுத்துப் பிடித்து நிறுத்தியிருந்தான். இல்லையேல் குதிரையின் இரும்பனைய நால்கள் அந்த அபலைப் பெண்ணைக் கீழே தள்ளிப் புழுதியில் உருட்டி எடுத்து உருக்குலைந்த சிலையாக மாற்றியிருக்கும்

என்ன அன்னம் இப்படியும் வரலாமா? என்று கேட்டவாறு திருமலை குதிரையினின்று குதித்து அவளருகே வந்து நின்றான். பயத்தால் வெளிறியிருந்த அவள் முகத்தில் நாணம் சிவப்பேற்றியது. அவன் விரல்கள் அன்போடு அவள் மோவாயைப் பற்றவும், அவள் இதழ்களில் சிறு சிரிப்பு நெளிந்தது. கண்கள் ஒளி ஏற்று மின்னின.

நான் திடுக்கிட்டது விபத்து நேர்ந்திருக்குமே என்பதனால் மட்டுமல்ல. என் எண்ணத்தை உணர்ந்து சரியாகச் சொன்னது யாரோ என்ற திகைப்புத்தான் என்னை உலுக்கியது. உண்மை அதுதான். சாகவேண்டும் என்றுதான் நான் கிளம்பினேன். கடலின் பயங்கர அலைகள் என்னை உருட்டிக் குலுக்கிச் சாகடிப்பதைவிட, உங்களுடைய குதிரையின் கால்கள் எனக்குச் சாவு தருவதை நான் பெரும் பாக்கியம் என்றே கருதுவேன்...