பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

13

'நீ போய்ப் படுத்துக்கொள்ளலாம். எந்தச் சமயம் யார்வந்து கதவைத் தட்டினாலும் யார், ஏன் என்று கேளாது திறந்து இங்கே வரவிடு. இந்த இரவுக்கு மட்டுமே இக் கட்டளை' என மொழிந்தாள் அழகி.

அன்னக்கிளியின் முகத்தில் புன்னகை சிறு நிலவாய் ரேகையிட்டது. கோடிட்ட சுவடு தெரியாமல் மறைந்தும் விட்டது. 'ஆகட்டும் அம்மா!’ என்று சொல்வி அங்கிருந்து அகன்றாள் அவள்.

அமுதவல்லி உறக்கம் கொள்ளாமல் புரண்டு கொண்டிருந்தாள். 'அவர் வருவாரா, வராமலே இருந்து விடுவாரா?' என்ற எண்ணத்தை வைத்துத் தறி அடித்தது அவள் மனம். 'அவருக்கு ஏன் இவ்வளவு கல்நெஞ்சு? நான் கெஞ்சிக் கெஞ்சி அழைத்தும் அவர் புறக்கணிப்பது போல் நடந்து கொள்கிறாரே, ஏன்? என்று அலுத்துக் கொண்டது.

நேரம் ஓடியது.

அழகி ஆவலுடன் எதிர்நோக்கிய இளமாறன் வருவதாகத் தோன்றவில்லை. அவளுக்கு ஏக்கமும், துக்கமும், ஆத்திரமும் பொங்கி வந்தன. ஊஞ்சலிலிருந்து இறங்கி அங்குமிங்கும் நடந்தாள். சாரளத்தின் ஓரம் நின்று, ஆள் அரவமற்ற வீதிகளை வெறித்து நோக்கினாள். அனல் மூச்சு உயிர்த்தாள்.

'இளமாறன் என்னே ஏமாற்றத் துணிந்தான் போலும்! இது ஆபத்தான விளையாட்டு என்பதை அவன் உணரவில்லை போலும்! கோபம் கொண்டுவிட்டால் அமுதவல்லி விஷக் கன்னியாக மாறுவாள் என்பதை அவன் அறியான் போலும்!' என்று குமுறினாள் அவள்.