உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

15

-லுக்கு அல்லவா வருவான்!” என்று அதுவே அடித்துத் திருத்தியது.

அவளுக்கு ஒருவித அச்சம் ஏற்படத்தான் செய்தது. யாரோ ஓடி வருவது போல் ஓசை எழுந்ததாக அவள் எண்ணினாள். அன்னக்கிளியைத் துணைக்கு அழைக்கலாமா?’ என்று நினைத்தாள்.

அதே வேளையில் கீழே கதவு தட்டப்படும் ஓசையும் தாள் திறக்கப்பட்ட ஒலியும் எழுந்தன. அழகியின் இதயம் 'திக் திக்’ என்று அடித்துக் கொண்டது. அது இன்பத் துடிப்பா? பயத்தின் பதைபதைப்பா? அவளுக்கே தெரியாது. ஆவலுடன் விளக்கைத் தூண்டிவிட நகர்ந்தாள் அவள்.

அவளை அப்படியே சிலையாக்கி விடுவது போன்ற - உள்ளத்தை உலுக்கி, உதிரத்தை உறைய வைத்து, உடலைக் குளிர வைக்கும் ஒரு பயங்கர ஒலி — வேதனையில் எழுந்த அலறல் அவள் காதில் வந்து விழுந்தது. செயல்திறம் இழந்து, வாய் பிளந்து நின்று விட்டாள் அலங்காரி.