பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அன்னக்கிளி

3. நள்ளிரவில் ஒரு ஆந்தை!

தேய்பிறை நிலவின் மங்கிய வொள்ளொளி போர்வை போல் மூடிக்கிடந்த சூழ்நிலையில், இரவின் அச்சமும் ஆதிக்கமுமே தலைதுாக்கி நின்ற வேளையில், உள்ளத்தைக் குத்தி உதிரத்தை உறையச்செய்வது போன்ற அலறல் எழுந்ததும், மாடியில் நின்ற அமுதவல்லி திடுக்கிட்டாள் அவள் என்ன, யாராக இருப்பினும் திடுக்குறாமல் இருக்க இயலாதே அந்நேரத்தில், கிரீச்சிட்ட அந்த ஒலியைக் கேட்டு!

இவ் வேளையில் கதவைத் தட்டியது யாராக இருக்கும்? திருமாறனாகவே இருக்கலாமோ? ...தோட்டத்திலே மரங்களின் மறைப்பிலே பதுங்கி வந்தவன் யாவன்? அவனே கதவைத் தட்டியிருக்கலாமோ! அவ்வாறாயின் அலறல் எழுந்தது ஏனோ? அஞ்சி நடுங்கிக் கூச்சலிட்டது பெண் குரல் போல் அல்லவோ ஒலித்தது? அன்னக்கிளிக்குத் தீங்கு எதுவும் ஏற்பட்டிருக்குமோ...?

அழகி அமுதவல்லியின் நெஞ்சு திக் திக்கென்றடித்தது. தலையணையின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய குத்தீட்டியை முன்னெச்சரிக்கையோடு கையில் பற்றிக்கொண்டு, அவள் விளக்கைச் சிறிது தூண்டி விட்டாள். கையெட்டும் தூரத்திலிருந்த சிறு விளக்கில் ஒளி ஏற்றிக் கொண்டு படி இறங்கிக் கீழே செல்லலாமா; அது அறிவுடைமையாகுமா என்று தயங்கினாள் ஒரு கனம்.

அவளுடைய ஆலோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அவளுக்கு வீண்வேலை வைக்கத் திருவுளம் கொள்ளாதவர் போலவும் நடந்துகொண்டனர் கீழே கதவைத் தட்டியவர் என்பதை மேலேறி வந்த காலடி ஓசை தடதட வென்று எடுத்தோதியது.