பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.அன்னக்கிளி

17


"நீ போகக்கூடாது. நீ மேலே போகக்கூடாது. வெளியே போ!' என்று அன்னக்கிளி கத்துவதும் அலட்சியமாக ஒருவன் சிரித்ததும் செவிட்டில் அறைவது போல் வந்து தாக்கின; அமுதவல்லி மீண்டும் திடுக்குற்றாள்.

அன்பனே வருகின்றான் போலும் என்று காலடி ஓசை கேட்டுச் சற்றே களிக்கை கொண்ட அமுதவல்லி இப்போது கலக்கமுற்றாள். வருவது யார்? வருவது யாரே யாயினும் தனக்கு நன்மை பயக்க முடியாதவனாகவே இருத்தல்வேண்டும். இல்லேயெனில் அன்னக்கிளி அவனைக் கண்டு அஞ்சி அலறுவானேன்? இப்பொழுது அவனை மேலே ஏறவொட்டாமல் தடுக்கவும் துணிவானேன்?

அன்னக்கிளி துணிச்சலோடு போராடியிருக்க வேண்டும்; படியேறி அலங்காரியின் அறைக்குள் புக முயல்கிறவனைத்தடுத்து நிறுத்துவதற்காக அவள் அவனதுகையைப் பற்றியோ காலைப் பிடித்து இழுத்தோ இடைஞ்சல் செய்திருக்க வேண்டும்; அவன் அவளை மெல்லியல்வல்லி என்றும் பாராது முரட்டுத்தனமாகத் தள்ளியிருக்க வேண்டும் என்றும் படிக்கட்டு ஓசைகள் கதை கூறின.

'ஊரே கண்ணுறங்கும் இந் நள்ளிரவு வேளையில் எந்தக்கயவன் வந்து இங்கு இப்படிச் சமரிடுவது? அன்னம் ஏன் கதவைத் திறந்தாள்? மற்ற பணிப் பெண்கள் என்ன சவ உறக்கமா உறங்கிக் கிடக்கிறார்கள்?' என்று இயல்பான சீற்றம் வெடித்தது அவள் உள்ளத்தில். அவள் எண்ணத்தின் தவற்றை உடனடியாகவே ஒருமனம் சுட்டிக் காட்டியது. 'நீ தானே இளமாறனை எதிர்நோக்கியதால், எவர் வரினும் தாள் திறந்து, வருவோரை யார் எனக் கேளாது உயரே அனுப்பு என்று அன்னத்துக்குக் கட்டளையிட்டாய்? பணிப் பெண்களை ஒசைகள் எட்டாத் தனி இடத்தில் ஒடுங்கிக் கிடக்க ஏற்பாடு செய்தது நீதானே.