பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்னக்கிளி

23

 நடையில் கண்ட காட்சி அவனுக்கு வேடிக்கை நிகழ்ச்சியாகத் தோன்றியது போலும். அவனது கடூரமான முகத்தில் சிரிப்பின் கோடுகள் பிதுங்கி நெளிந்தன.

4. ஆந்தைக்கு மண்டையில் அடி

அங்கே அன்னக்கிளி நின்றாள். வேடிக்கை பார்க்கும் வெறும் பெண்ணாக அல்ல. வீரமறக் குலத்தில் வந்தவள் என்பதை நிரூபிக்க முயலும் மங்கையாகத்தான்.

அவள் கண்களில் சினம் கொழுந்து விட்டு எரிந்தது. அவள் கையில் வாள் ஒன்று மின்னியது. ஆந்தையைத் தன்னால் கொல்ல முடியும் என்ற நம்பிக்கை அவளுக்குக் கிடையாது. ஆயினும் அவனைக் காயப்படுத்தி, தனது தலைவிக்கு உதவி புரியலாமே என்ற நல்லெண்ணம் அவளுக்கு இருந்தது.

'யார் வரினும் கதவைத் திறந்துவிடு. கேள்விகள் கேட்கவேண்டாம்' என்று அமுதவல்லி அவளுக்கு உத்திரவிட்டது உணர்ச்சி மிகுதியினால்தான்; அது முன்யோசனை உடையது ஆகாது என்று அன்னம் முதலிலேயே உணர்ந்தாள். எனினும், அமுதவல்லியின் கட்டளையை மறுத்துப் பேசுவதற்கு அவள் யார்? எதை எப்படிச் செய்யவேண்டும் என்று தலைவிக்குத் தெரியாதா என்ன? ஆகவே அன்னக்கிளி தன் கருத்தை வெளியிடவில்லை.

அவளும் அன்றிரவில் உறக்கம் கொள்ளாமல் உருண்டு புரண்டு பொழுதைக் கொலை செய்துகொண்டிருந்தாள். திருமாறன் வருவானா மாட்டானா என்பது அவள் கவலை இல்லை. அவள் நினைவுப் பரப்பிலே ஒரு தோற்றம் மின்னிக் கொண்டிருந்தது; மறையாமலே அழுத்தம் பெற்று நின்றது.