பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்னக்கிளி

25


ஏற்பட்டது. கதவு பலமாக இடிக்கப்படவும் அவள் வேகமாக எழுந்து திறந்தாள். அப்பொழுதுதான் அமுதவல்லியின் கட்டளை அவளுக்கு நன்றாக நினைவு வந்தது.

 'அடடா! விழிப்புடன் காத்திராமல் தூங்கிவிட்டேனே! பிராட்டி கோபித்துக்கொண்டால் என்ன செய்வது?’ என்று பதறி எழுந்து, அன்னம் கதவை வேகமாகத் திறந்தாள். அவளும் திருமாறனே வருகிறான் என்றுதான் எண்ணினாள்.

அந்த இடத்தின் இருளில் தனது ஆற்றலைக் காட்ட முயன்று கொண்டிருந்த ஒரு சிறு விளக்கொளி உண்மையை உணர்த்தியதும் அவள் திடுக்கிட்டாள். ஆனால் நிலைமை முற்றிவிட்டதே? இனிக் கதவை அடைத்துத் தாள்போட முடியுமா அந்த இளம் கொடியால்? இருளுருவம்போல் உள்ளே புகுந்த தடியனை நோக்கிக் கத்தத்தான் முடிந்தது அவளால்.

‘என் அருமை நாய்க் குட்டியே! ஏன் இப்படித் தொண்டைத் தண்ணீரை வற்ற வைக்கிறாய்?' என்று கூத்து வேட்டக்காரன்போல் பேசினான் ஆந்தை. செல்லமாக அவள் தலையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு முன்னேறினான்.

அன்னக்கிளியின் போராட்டம் பயனற்றுப்போனதால், அவள் ஒடுங்கிக் கிடந்தாளில்லை. எயில் ஊர் ஆந்தை அவளை முரட்டுத்தனமாக ஒதுக்கித் தள்ளியதால் அவளுக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. நிதானம் அடைகிறவரை அவள் படிக்கட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். தலைவியைக் காப்பாற்றவேண்டும்; தன்னை- தனது சொல்லை-மதிக்காத முரடனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தவித்தது அவள் உள்ளம்;