பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அன்னக்கிளி

 படபடத்தன அவள் கைவிரல்கள். அதனால் அவள் ஒரு வாளை எடுத்துக்கொண்டு மேலே சென்று மறைவில் பதுங்கி நின்று அங்கு நிகழ்ந்த வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நெருக்கடியான தருணம் வந்துவிட்டதை உணர்ந்ததும் அன்னக்கிளி ஓங்கிய வாளுடன் வாசல்படிமீது தோற்றம் தந்தாள். அவளை அமுதம்தான் முதலில் பார்த்தாள். 'சரியான தருணத்தில் உதவி புரிய வந்து விட்டாள்' என்று மகிழ்வுற்றது அவள் மனம்.

திரும்பி நோக்கிய ஆந்தை வேடிக்கையுறக் கண்டு நகைப்பவன் போல் கெக்கலித்து 'வாளை எவ்வாறு பிடிக்க வேண்டுமென்றுகூடத் தெரியாத நீயா இந்த மலையை வெட்டி வீழ்த்தப் போகிறாய்! பளாபளா!' என்று கூவினான்.

அதனால் ஆத்திரம் கொண்ட அன்னக்கிளி வெகுண்டு முன் பாய்ந்தாள். 'கிளி அமைதியோடு இருந்தாலும் அழகுதான்! பறந்து பாய்ந்தாலும் அழகுதான்!' என்று உவகையோடு மொழிந்தான் ஆந்தை. அது அவள் கோபத்தை நெருப்பெனத் தூண்டிவிட்டது. அவள் வாளைச் சுழற்றிக்கொண்டு அவனை நோக்கி ஓடிவந்தாள்.

'உன்மீது எனக்குக் கொள்ளை ஆசை அன்னக்கிளி, கொள்ளை ஆசை! உன் அழகும் பார்வையும் எப்போதும் பழங்களைப்போல் எனக்குக் கிறக்கம் தருகின்றன. அதிலும் இப்போது உன் வீரத்தையும் உணர்ந்த பிறகு.........' பேச்சை அவன் அறை குறையாக விட்டுவிட்டு, அதிக உயரத்திலிருந்து பாறைகளை உருட்டித் தள்ளுவது போன்ற ஒலி எழும்படி, பெருஞ் சிரிப்பு சிரித்தான் அவன்.