உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

27

 அன்னம் அருகே நெருங்கவும் ஆந்தை தனது முரட்டுக் கையை வீசி, அவளது வாள் பிடித்த கையை ஒரு தட்டுத் தட்டினான். பார்வைக்கு அது இலேசான அடி போலவே தோன்றியது. ஆனால்......

அன்னத்தின் முகம் வேதனையால் கோணிக் குறுகியது. கண்கள் நீரைக் கொட்டின. 'ஸ்ஸ், அம்மா!' என்று வலி தாங்கமாட்டாதவளாய் புலம்பிய அவளது இடக்கரம் வலக் கையை வேகமாகப் பற்றியது. முதலிலேயே வாளை நழுவவிட்டுத் துடிதுடித்தக் கைக்குப் பரிவு காட்டுவது போல.

தரைமீது விழுக்த வாளின் உலோக ஒலியை எதிரொலிப்பது போல், ஆந்தையின் சிரிப்பு அதிர்ந்தது அந்த அறையில்.

இதுவரை வேடிக்கை பார்த்து ஒதுங்கி நின்ற அமுதவல்லியின் உள்ளத்தில் சிறிது சிறிதாக ஒரு நெருப்பு மூண்டு வந்தது. அன்னக்கிளியின் மீது ஒருவகை ஆத்திரமும் பொறாமையின் முளை போன்றதொரு மெல்லுணர்வும் அங்கு அனல் நாக்குகள் நீட்டலாயின.

'அவளைப் பிறகு கவனிப்போம். முதலில் இந்தத் தடியனை அடித்து விரட்டுவோம்’ என்று தேர்ந்து அமுதம் கைக்குள் சிக்கிய கனமான பொருள் எதையோ எடுத்து வீசி அடித்தாள்.

'பிராட்டியாரின் கைகள்தான் வீணாக நோவெடுக்கும். எனக்கு எவ்விதத் தீமையும் ஏற்படாது. மேலும் அமுதவல்லி என்னைக்கண்டு அஞ்சவேண்டியதில்லை. கொய்யாக்கனி மினுமினுப்போடு காத்திருக்கையில், சுவைத்து