பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

33

 'இதோ, இதையும் என்னையும் மறக்காதே!’ என்று மற்றுமொரு அறை கொடுத்தான் தடியன்.

கொடி போன்ற அம் மட மங்கை துடிதுடித்தாள்.

'படுக்கையில் விழுந்து அழு. விடிவதற்குள் எல்லாம் சரியாகிவிடும்.நான் ஒழிந்தேன் என்று எண்ணாதே. மறுபடியும் வருவேன். முத்தாரம் என்னிடம் வந்து சேருகிற வரை, பேய்போல் இந்த வீட்டையே நான் சுற்றித் திரிவேன்' என்று எச்சரித்து விட்டு நகர்ந்தான் அவன்.

உடல் வலி, மன வேதனை, ஏமாற்றம் முதலிய பல குழப்பங்களாலும் உளம் நொந்த அமுதவல்லி படுக்கையில் விழுந்து அழுது கிடந்தாள்.

எயில் ஊர் ஆந்தை தனக்கு இயல்பான வேகத்தோடு நடக்க முடியாமல், மெதுவாகப் படிக்கட்டுகளைக் கடந்து நிலவொளி படிந்த இடத்தை அடைந்தபோது, வண்டி சிறிது தொலைவு சென்று விட்டதைக் கண்டான். அது அவன் கொண்டு வந்திருந்த வண்டிதான். அவன் எந்த அழகியை எடுத்துச் செல்ல ஆசைப்பட்டானோ, அவளையே தாங்கிச் செல்கிறது அது. ஆனால் திருட்டுத் தனமாகப் பதுங்கி நின்ற எவனோ அன்றே அதை ஒட்டிச் செல்கிறான்!

ஆந்தையின் வலுமிக்க கை, வெண்கலச் சிலையின் மண்டை போன்ற தலையைத் தடவிக்கொண்டது. இனி என்ன செய்வது? கண் முன்னாலேயே தனது உடைமையும், தான் ஆசைவைத்த அழுகுப் பொருளும் பறிக்கப்பட்டுத் தன்னை விட்டு விலகிப் போவதைப் பார்த்தபடி நிற்க வேண்டிய செயலற்ற தன்மை தனக்கும் வந்துவிட்டதே என்று குமைந்தான் அவன். கொதித்தது உள்ளம்.r