பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அன்னக்கிளி

 அதனால் கவனம் கலையப் பெற்ற திருமலைக்கொழுந்து அவள் பக்கம் தலை திருப்பியதும் 'ஒகோ!' என்று மகிழ்வுடன் கூறி, உற்சாகத்தால் உதடுகளைக் குவித்துச் சீட்டி அடித்தான்.

பால் நிலவில் வெண்மையாய் பளிச்சிட்டது சந்திர வட்ட முகம். அங்கே கருவண்டுகள் போன்ற இருவிழிகள் குறுகுறுத்தன. செவ்வாம்பல் நிற இதழ்களில் சிறு நகை முகிழ்த்திருந்தது. அந்த முகத்தை, அவ்விழிகளை, புன்னகைக்கும் அந்த உதடுகளை அவன் எப்படி மறக்க முடியும்? கொற்கைப்பட்டினத்தின் வீதிவழியே, அந்தி நேரத்தில் குதிரை மீது உலா வந்தபோது, பலகணியின் பின்னே பவுர்ணமி நிலவுபோல் தோன்றி அவன் உள்ளத்தில் நிலைபெற்று விட்டது அல்லவா அந்த முகம்! கண் வழிப் புகுந்து, உள்ளத்தில் நிறைந்து, பின் நீங்காது இடர் செய்து கொண்டிருக்கும் அமுதமும் நஞ்சும் போன்ற பார்வையைச் சிந்தும் சுடர் விழிகள் அல்லவா அவை! அவற்றை அவன் எவ்விதம் மறத்தல் கூடும்?

'ஓ, நீயா!' என்றான் அவன்.

அன்னக்கிளி ஆனந்தத்தின் உருவமாகி வண்டியிலிருந்து வெளியே குதித்தாள்.

மருது பாண்டியன் கலகலவெனச் சிரித்தான். அவன் ஏன் சிரிக்கிறான் என்று அறிய மற்றிருவரும் அத்திசை நோக்கினர்.

திருமலையின் கவனம் வேறுபக்கம் திரும்பி விட்டதை உணர்ந்த வண்டியோட்டி 'தப்பினோம் பிழைத்தோம்’ என்று பதறியடித்துக் கீழே குதித்து ஓடலானான். அவன்