பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அன்னக்கிளி

 பெண்ணுக்குத்தான் பொறாமையை உண்டாக்காது? அமுதவல்லிக்கும் பொறாமை பிறந்தது.

குதிரைகள் அவள் வீட்டின் முன் வந்து நின்றன.இளைஞர்கள் குதித்து இறங்கிய மிடுக்கும், திருமலை அன்னத்தை இறக்கிய அழகும், அவள் அவனை விட்டுப் பிரிய மனமில்லாதவளாய் அவனோடு சேர்ந்து நின்றதும், அவன் அவள் முகத்தைப் பார்த்து முறுவல் பூக்க, அன்னம் தாமரை மலர்போன்ற தன் எழில் முகம் உயர்த்தி மகிழ்வு காட்டியதும் நிலவொளியில் அற்புத ஒவியங்களாகத் தோன்றின. ஆயினும் அவற்றை ரசிக்கும் மனநிலை அமுதவல்லிக்கு இல்லையே.

மூவரும் மாடிக்கு வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்னரே அமுதவல்லி வேகமாக நகர்ந்து ஊஞ்சலில் படுத்துக்கொண்டாள். அவ் வேளையில் கூட வருகின்ற இளைஞரின் பார்வையையும் மனதையும் கவரக்கூடிய வசீகர நிலையில் சரிந்து கிடக்க அவள் சிரத்தை எடுத்துக்கொண்டாள்.

அவளுடைய தன்மைகளை ஒருவாறு அறிந்திருந்த அன்னக்கிளி முதலில் தன்னைப்பற்றிய பேச்சை எடுக்கவில்லை. பரிவுடனும் கவலையோடும் தலைவி பற்றியே வினவினாள்; ஆந்தை எப்படி ஒழிந்து போனான் என்று விசாரித்தாள்.

'சனியன் எப்படியோ தொலைந்தது’ என்று அலுப்புடன் மொழிந்தாள் அலங்காரி.

தனக்கு நேர்ந்த ஆபத்தையும் நல்ல சமயத்தில் அவ் வீரர்கள் வந்து காப்பாற்றியதையும் அன்னம் அவளுக்குச்