பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

சில வார்த்தைகள்

ராஜா ராணி’ கதைகளுக்கு மக்களிடம் என்றுமே அதிகமான செல்வாக்கு உண்டு. குழந்தைப் பிராயத்தில் பாட்டி, தாத்தா, அம்மா, மற்றும் சுவையாகக் கதை சொல்லத் தெரிந்தவர்கள் வாய் மூலம் இத்தகைய கதைகளைக் கேட்டுக் கேட்டு உள்ளுற வளர்ந்து வருகிற ஒரு விருப்பம், பெரியவர்களான பிறகு சரித்திரக் கதைகளிடம் விசேஷமான மோகமாகப் பரிணமித்து விடுகிறது போலும். அதனால்தான், பெரும்பாலோருக்கு 'சரித்திரக் கதைகள், நாவல்கள்’ என்று சொல்லப்படுகிற கற்பனைகள் மீது அதிகமான ஈடுபாடும் ரசனையும் ஏற்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.

அன்றாட வாழ்க்கையின் வறட்சி கனவு உலகத்தின் குளுமையான பசுமையில் இனிமைகாணத் துாண்டுகிறது. நிகழ்கால வாழ்வின் வெறுமையும், சாரமற்ற போக்கும், சாதாரணமான நிகழ்ச்சிகளும் சரித்திர நாயகர்களின் - கற்பனை வீரர்களின் - அசாதாரண மனிதர்களின் வீர தீர சாகசச் செயல்களில் ஒரு வியப்பையும் நிறைவையும் கண்டு மகிழும்படி மனித உள்ளத்தைத் தயார்படுத்திவிடுகின்றன.

சாதாரண மனிதர்கள் கூட அசகாய சூரத்தனங்கள் செய்து பிறர் கவனத்தைக் கவரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். செயல் திறம் இல்லாதவர்கள் கனவுகளில் லயித்து இன்பம் அடைய முயல்கிறார்கள். அல்லது, பிறரது கற்பனை படைக்கும் சுவையான அளப்புகளில் மகிழ்வு காண்கிறார்கள். இந்த மனோபாவமே 'ஸ்டன்ட்', ‘ஸஸ்பென்ஸ்', கத்திச் சண்டை, மர்மச் செயல்கள், துப்பறியும் நிகழ்ச்சிகள் போன்ற சாகசங்கள் நிறைந்த நாவல்கள், தொடர் கதைகள், சினிமாப் படங்கள் முதலிய வற்றில் மக்களுக்கு அதிக ஆர்வத்தை ஊட்டி வருகிறது.