பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

48


அன்னம் தயக்கத்தோடு மிரள மிரள விழித்தாள். தலைவியின் பேச்சைத் தட்டிப் பேசும் பழக்கம் இல்லாதவள் அவள். அமுதம் இடுகின்ற ஆணைகளை ஏற்று, அவள் விருப்பம்போல் செயல் புரியும் பண்புபெற்றவள். இப்போது பெரியவளின் கட்டளைக்கு மறுப்புக் காட்ட வேண்டியிருக்கிறதே என்ற தயக்கமும், அவள் எப்படிச் சீறிப்பாய்வாளோ என்னும் அச்சமும் அன்னத்துக்கு எழுந்தன. இருப்பினும் துணிந்து 'அம்மா...' என்று வாய் திறந்தாள்.

அமுதம் அவள் போக்கிலேயே பேசிக் கொண்டிருந்தாள்: வருகிறேன் என்று சொன்ன திருமாறன் ஏன் வரவில்லை என்பதை நான் அறிந்தாக வேண்டும். அவர் வந்து வழியில் ஏதேனும் இடைஞ்சல்கள் ஏற்பட்டதனால் வீடு திரும்பி விட்டார் என்று அறிந்தாலாவது எனக்கு ஒரு மன அமைதி ஏற்படும். அவர் வண்டி என்ன ஆயிற்று என்றும் தெரியமுடிந்தால் அறிந்து வா...'

'அம்மா என்னை மன்னியுங்கள். திருமாறனைக் கண்டு பேச வேறு யாரையாவது அனுப்புங்கள் அம்மா...'

அன்னக்கிளி பணிவுடன்தான் மொழிந்தாள். ஆயினும் அமுதத்தின் உள்ளத்திலே அது சினமெனும் தீயைப் படரவிட்டது என்பதைத் தலைவியின் முகக் கடுப்பு பளிச்சிட்டுக் காட்டியது.

அவளது எரிதழற் பார்வை பேதைப் பெண்ணைச் சுடுவது போலிருந்தது.

'உனக்கு என்ன கேடு? என்னை மறுத்துப் பேச உனக்கு என்ன அகந்தை?' என்று சீறினாள் தலைவி.