பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

51

 துரைத்ததற்குக் காரணம் இருந்தது. அதை அவள் தலைவியிடம் அறிவிக்கத் தயங்கியதற்கும் காரணம் இல்லாமலில்லை.

உற்சாகமின்றித் தலைவியின் கட்டளையை நிறைவேற்றச் சென்று கொண்டிருந்த அன்னக்கிளி அதைப்பற்றி நினைத்தபடியே தான் நடந்தாள்.

முந்திய தினம் அவள் தலைவியின் கடிதத்தைத் திருமாறனிடம் சேர்ப்பிக்கச் சென்றபோது வெகு நேரம் வரை காத்து நிற்க நேர்ந்தது. அவரிடம் தனிமையில் அதைத் தர வேண்டும் என்று தலைவி உத்தரவிட்டிருந்தாளே! திருமாறன் இதர அலுவல்களையெல்லாம் கவனித்து முடித்துவிட்டு அவள் பக்கம் கண்களைத் திருப்பினார், உடனே அக் கண்களில் பிறந்த தனி ஒளி அன்னத்தைக் கூசி நாணுறச் செய்தது.

திருமாறன் பெரிய மனிதர்; செல்வர்; நாட்டில் உள்ள பெரியவர்களும் செல்வர்களும் போற்றும் நிலையில் இருப்பவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தாள் அன்னம். அவரிடம் அவளுக்கு ஒரு ரகமான பயமும் மதிப்பும் ஏற்பட்டிருந்தன. அவர் அவளை அவ்விதம் நோக்கியது அவள் மனசுக்கு வேதனை அளித்தது. அவள் தலையைத் தாழ்த்தியபடி கை நீட்டிக் கடிதத்தைக் கொடுத்தாள்.

'அளவுக்கு அதிகமான வெட்கம் அழகான பெண்ணுக்குக் கூட அழகாக இருப்பதில்லை; உள்ள அழகையும் அது கெடுத்துவிடுகிறது' என்று சொல்லி அவர் குறும்புச்சிரிப்பு சிரித்தார்.

அவர் பேச்சும் சிரிப்பும் அவள் காதைக் குத்தி உள்ளத்தில் தைத்தன. அவள் உடலில் சிறு நடுக்கம் பரவியது.