பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

53

 போயேன்?’ என்று திருமாறன் சொன்ன விதமும், அவர் பார்த்த தினுசும் அன்னக்கிளிக்குப் பிடிக்கவில்லை; பதைபதைப்பையும் உண்டாக்கின.

அவள் திரும்பி ஓடுவதற்கு வழிபார்த்தாள். அவருடைய பதிலை எடுத்துச் செல்லாமல் சும்மா போனால் தலைவி கோபிப்பாளே என்ற பயம் வேறு.

திருமாறன் அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார். 'நான் எவ்வளவோ மலர்களைக் கண்டு களித்திருக்கிறேன். உன்னைப்போன்ற மிக இனிய மலரை நான் இதுவரை கண்டதில்லை’ என்று உளறத் தொடங்கினார்.

அன்னக்கிளியின் நல்ல காலம் ஏதோ முக்கிய அலுவலின் மீது இரண்டு பேர் வந்து அவரைக் காண அனுமதி கோருகிறார்கள் என்ற தகவலோடு பணியாள் வந்து நின்றான். 'இதோ வருகிறேன்’ என்று வேலைக்காரனை அனுப்பிவிட்டு அவர் அன்னத்தை நோக்கி முறுவல் பூத்தார்.

'அன்னம்! நீ என் பசி தீர்க்கும் அன்னமாக மாறுவாயோ என்னவோ' என்று வேடிக்கையாகப் பேசுவது போல் குறிப்பிட்டு, தனது கருத்தைப் பார்வையால் வெளியிட்டார் அவர்.

'அம்மாவிடம் என்ன சொல்ல வேண்டும்?’ என்று அவசரப்பட்டாள் அன்னம்.

'வருவதாகச் சொல் கிளியே' என்றார் திருமாறன். 'வந்தால் இந்தக் கிளியையும் பார்க்கலாம் அல்லவா?'