பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி


1. பலகணி ஊடே பெளர்ணமி நிலவு

'தமிழ் பிறந்த பொதிகை மலையிலே ஓங்கி வளர்ந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்படாத காலம் அது.

கிண்கிணி ஆர்க்க எழில் நடை பயிலும் இளங்குமரி போல் சொகுசாக நெளியும் களங்கமில்லாப் பொருனை நதி தளர்ச்சி என்பதைக் கண்டறியாத காலம் அது.

தவழும் தென்றலுடன் மிதந்த தமிழிலே பாண்டியனின் புகழும் பெருமையும், வளமும் வலிமையும் முழங்கிக் கொண்டிருந்த காலம் அது.

புரண்டு குதித்துத் துள்ளி முன்னேறும் தாமிரவருணி அலை பொங்கிப் பாயும் கடலோடு கலக்கும் இடத்தருகே கொலுவிருந்த கொற்கை நகர் அழியாத காலம் அது.

புன்னை மொககுகள போலும குண்டு மல்லி அரும்புகள் போலும் விளங்கிய முத்துக்கள் அந் நகரின் துறைமுகத்திலே குவியல் குவியலாக வாணிபமாகிக் கொண்டிருந்த காலம் அது.