பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.68

அன்னக்கிளி


திருப்ப முடியாமல் செயலிழந்து நின்றாள் அந்த இளம் பெண்.

பேயெனச் சிரித்தபடி பெண் முன்னே வந்து நின்றான் பேருருவ ஆந்தை! இவனா? இவன் சிரித்த சிரிப்புதான் அது. இவன் குரலேதான்! இவனா இங்கு இருந்தான்? இவன் இங்கு எப்படி வந்தான்? ஏன் வந்தான்? என்று பதறி நடுங்கினாள் அன்னம்.

முத்துக்களைக் கொள்ளையிட வந்திருப்பானோ என்ற ஐயம் எழுந்தது. 'முட்டாள்தனமான நினைப்பு! திருமாறன் வீட்டில் யார் கொள்ளையிட முடியும்?' என்ற எண்ணம் முன் நினைப்பைக் கொன்றது. 'இவன் மாறனின் கையாள் என நான் எண்ணினேன். அது சரியாகத்தான் இருக்கும்' என்று மனம் பேசியது.

‘இவன்தான் இரவில் மாறனின் வண்டியில் வந்தானோ என்னவோ! அமுதவல்லியை விட்டு அகன்ற பிறகு, வண்டியைக்காணாது தேடியிருப்பான். தெருவில் தள்ளி நின்ற அதைக் கண்டு, மீண்டும் மாறன் வீட்டில் கொண்டுவந்து சேர்த்திருப்பான். இதுதான் நிகழ்ந்திருக்கும்’ என்று அவள் கருதினாள்.

அவளையே பார்த்தபடி வாசல் நடையிலே பெருஞ்சிலையென நின்றான் எயில் ஊர் ஆந்தை. அவள் வாய் திறவாது குழம்பித் தவிப்பதைக் கண்டு களித்தான். 'அன்னக்கிளி! என்ன சொல்கிறாய் இப்போது?’ என்று கூறிக் கனைத்தான்

அவள் என்ன சொல்லப் போகிறாள்! பேசாமல்தான் நின்றாள்.