பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அன்னக்கிளி

 -திருந்தால், அலங்காரி அதை அவருக்குக் கொடுத்திருந்தாலும் கொடுத்திருக்கக்கூடும். அவரோ அவளை அலட்சியப்படுத்துவதுபோல் நடந்துகொண்டார்.

அமுதவல்லியைப் பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். வாழ்க்கையைச் சொர்க்க போகமாக மாற்ற முயலுகின்ற சரசவல்லி சைகை காட்டிவிட்டால், நாம் போயாக வேண்டுமா என்ன? அப்படிச் செய்வது தனது தன்மானத்துக்கு இழுக்கு ஆகும் என்று அவர் எண்ணினர்.

மேலும் திருமாறனுக்கு அமுதவல்லியிடம் அன்போ அனுதாபமோ கிடையாது. எளிதில் கிட்டக்கூடிய ஒரு பொருளிடம் அவ்வளவாக லயிப்பு ஏற்படாமல் போவதும் இயல்பே யன்றோ? எட்டாத பொருளை எப்படியும் அடைந்தே ஆகவேண்டும் என்ற ஆசை அடக்க முடியாததாக வளருவதும் இயற்கைதானே?

அமுதவல்லி அழகியே யானாலும், அனுபவமும் வயதும் அதிகம் பெற்றவள். வனப்பும் வசீகரமும் நிறைந்த எழில் மலரே ஆயினும், பலமுறை நுகரப் பெற்றுக் கறை பட்ட பூ. மணமும் சுவையும் கொண்ட இன்கனியே ஆனாலும், பலரால் எச்சிற்படுத்தப்பட்ட கனிதானே?

திருமாறனின் மனம் அன்னக்கிளியைச் சுற்றி வந்தது. அவளிடம் வெறியூட்டும் காந்தக் கவர்ச்சி இல்லைதான். அவளது கருநீலக் கண்கள் காமத்தைக் கவிதைப் பார்வையாய் வெளிப்படுத்தவில்லைதான். ஆயினும், அன்னம் வாடாத நண்மலர். தொடப்படாத புத்தம் புதிய பூ. இளமையின் நிறைகுடம், பெண்ணின் நல்வடிவம். அறியாமை அவள் அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. தாவாத மான்குட்டி, மோவாத நல்லரும்பு; புரையாத மணி