பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

81


ஆசைப்படுகிறான். திடீரென்று இவர்களுக்கெல்லாம் எனது முத்து மாலை மீதுதானா ஆசை விழவேண்டும்?' அவள் உளம் குமைந்தாள்.

அவளுக்கு அன்னக்கிளி மீது வீணாகக் கோபம் ஏற்பட்டது. 'ஆந்தையிடம் அவளே அக்கடிதத்தைக் காட்டியிருப்பாள் என்று மாறன் சொல்லுவதும் உண்மையாக இருக்குமோ?' என்று ஒரு சிறு சந்தேகம் அவள் மனசில் ஊசலிட்டது.

இருக்கமுடியாது. அப்படி இருக்கவே இருக்காது. மாறன் அவள்மேல் வீண்பழி சுமத்துகிறான். அன்னம் ஆந்தைக்கு வேண்டியவளாக இருந்தால், அவனோடு ஏன் சண்டையிடப் போகிறாள்? அவனிடமிருந்து அவள் ஏன் தப்பி ஓடவேண்டும்?' என்று அமுதமே சமாதானமும் கூறிக்கொண்டாள்.

'அன்னக்கிளி இன்னும் வரவில்லையே? எங்கே போயிருப்பாள்?' என்றும் எண்ணினாள் அவள். திருமாறனின் போக்கை நினைக்க நினைக்க அவளுக்கு உள்ளம் பற்றி எறிவதுபோலிருந்தது. 'அவன் வருவான். மீண்டும் வருவானே. அவனிடமிருந்து தப்புவது எப்படி?' என்று தவித்தாள். அன்பு காட்டி, குடிப்பதற்கு ஏதாவது கொடுப்பதுபோல் நஞ்சு கலந்து கொடுத்து விடலாமா என்றுகூட அவள் மனம் திட்டமிட்டது.

முத்துமாலை அவளிடம் சுலபமாகவா சிக்கியது? பிறர் கொடுத்துப் பெற்றதா அது? அவளாகத் துணிந்து அடைந்தது அல்லவா? ஆந்தை மிரட்டினானே, அது உயர்வு நவிற்சி அல்லதான்.