அன்னக்கிளி
3
கைதேர்ந்த சிற்பி செய்த சிலைகள் உயிர் பெற்று நடப்பன போல் வந்தன குதிரைகள். மினுமினுக்கும் கரியமேனி, எடுப்பான உடல் அமைப்பு, கம்பீரப் பார்வை எறியும் அழகான கண்கள், நெற்றியில் அழகு தரும் திலகம் போல் வெள்ளை நிறம் இயற்கையாகவே அமைந்து கிடந்தது. மண்ணை மிதித்து உதைத்து உந்தி எழுந்து விசையாய்ப் பாய்ந்து அவை முன்னேறும் நடையின் மிடுக்கும் நயமும், அப்பாய்ச்சல் எழுப்பிய ஒலியும் அச்சத்துக்கும் அதிசயத்துக்கும் வித்திட்டன. அவற்றின் மீதிருந்த இருவரும் ஆண்மையின் லட்சியங்கள்; வீரத்திரு உருவங்கள்.
அவர்கள் அவ்வூருக்குப் புதியவர்கள் என்றே தோன்றியது. குதிரைகளை விரட்டி ஓட்டாது அமைதி நடையிலேயே செலுத்திச் சென்ற அவர்களது விழிகள் நகர் நயம் காணும் பொருட்டு ஒய்வின்றிச் சுழன்றன. துறைமுகத்தருகே நின்று கடலையும் கலங்களையும் நகர்ப்புறக் காட்சிகளையும் பருந்துப் பார்வையால் விழுங்கிய வீரர்கள், சாயும் சூரியனின் மஞ்சள் வெயிலில் அற்புதமான சிலைகள் போலவே காட்சி அளித்தனர். ஒரு கணம்தான். பிறகு அவர்கள் குதிரைகளைத் திருப்பிச் சற்று வேகமான நடையில் நகரினுள் புகுந்தனர்.
அவர்களைப்பற்றி, தங்களுக்குத் தோன்றியதைப் பேசி நின்றவர்கள் பின்னர் தத்தம் அலுவலில் ஈடுபட்டார்கள்.
அரச வீதி வழியாகச் சென்றன குதிரைகள். குதிரை வீரர்களை வேடிக்கைப் பார்த்து வாயில் விரல் வைத்து நின்றனர் சிறுவர் சிறுமியர். 'யார் இவர்?’ என்று கவனிப்பவர் போல் கண்ணெறிந்தனர் பெரியோர். எதிர்ப்பட்ட பெண்கள் இயல்பாய் பார்த்துப் பின் அவர் தம் அழகை விழுங்க மண்டும் கண்களை ஏவினர். வீட்டு வாசல்படி