பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அன்னக்கிளி

சடையவர்ம பாண்டியனது தேவியின் முத்துமாலையை அடைவதற்கு அமுதவல்லி செய்த சூழ்ச்சியில் ஆந்தைக்கும் முக்கிய பங்கு உண்டு. அவன் அமுதவல்லியை மிரட்டி, அடிக்கடி பணம் பெற்றுச் சுகமாக வாழலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து வந்த வீரன் ஒருவன் அவனை இனம் கண்டு விட்டான். அவ்வீரன் தனது உறைவிடத்தைப் பாண்டியனின் ஆட்களுக்கு அறிவித்து, தன்னை வேட்டையாடும்படி தூண்டிவிடக்கூடும் எனும் அச்சம் ஆந்தைக்கு ஏற்பட்டது.

தனது திட்டத்தில் தனக்கு உடந்தையாக இருந்த ஆந்தை சிறிது காலம் எங்கேனும் தலை மறைவாக இருந்தால் நல்லது என்றே அமுதவல்லியும் கருதினாள். ஆகவே, அவன் ஒரு கப்பலில் யாத்திரை போவதாகக் கூறியதும் அவள் அவனுக்குப் பொருள் உதவி செய்தாள். உடனடியாக அவள் அவனை மறந்தும் விட்டாள். உல்லாசத்தையும் இனிமைகளையும் பற்றி மட்டுமே எண்ணியும் கனவு கண்டும் பொழுதுபோக்க அவாவுறுகின்ற சிங்காரியின் உள்ளத்திலே கசப்பான நினைவுகளுக்கு இடம் ஏது?

ஆந்தை இடைக்காலத்தில், கடலோடிகளோடு ஒரு கடலோடியாக வாழ்ந்தான். அந்தக் கஷ்டமான பிழைப்பில் அவனுக்கு அலுப்பு ஏற்பட்டது. முத்து வியாபாரி கொற்கை செல்வதாகச் சொன்னதும், அவனுக்கு உதவி புரிவதாகக் கூறிக்கொண்டு ஆந்தையும் அவனோடு வந்து சேர்ந்தான்.

அவன் கடல் மீதே பல மாதங்களைக் கழிக்க நேரிட்ட தாலும், அவன் பணிபுரிந்த மரக்கலம் தொலை தூரங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததனாலும், சடையவர்ம பாண்டியன் இறந்துவிட்டதை ஆந்தை அறிந்தானில்லை. அமுத