பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

89

-வல்லியின் முத்துமாலை நினைவில் பளிச்சிட்டதும்தான் அவளுடைய சதிச் செயலை மன்னனிடம் அறிவித்துப் பொன்னும் பொருளும் பெறலாம்; அமுதவல்லியை மிரட்டி அவளிடமிருந்தும் பொருள் பறிக்கலாம் என்று அவனது நரித்தன மூளை ஆசை விதைத்தது.

அமுதவல்லியை இரவிலே கண்டு மிரட்டியபோது அவள் அஞ்சி நடுங்காததன் உண்மைக் காரணத்தை ஆந்தை மறுநாள் தான் புரிந்துகொள்ள முடிந்தது. சடையவர்மன் உயிருடன் இல்லை; அவளைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ அங்கு எவருமில்லை என்பதை அவன் தெரிந்து கொண்டான். எனவே அவளிடமிருந்து முத்தாரத்தைக் களவாட வேண்டும்; அது தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்திருந்தான் அவன்.

இரவு வேளையில் மீண்டும் அமுதவல்லி வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்த ஆந்தை திருமாறனைக் கண்டு பேச வந்தான். அமுதவல்லியிடம் சடையவர்மனது தேவியாரின் முத்துமாலை இருக்கிறது என்ற உண்மையை அவன் கூறாமலே அறிந்திருந்தார் திருமாறன். அவளைச் சந்திக்கும் எண்ணத்தோடு அவர் கிளம்பிய தருணத்திலேதான் ஆந்தை அவரிடம் வந்து சேர்ந்தான். முத்து வியாபாரம் பற்றி முக்கிய விஷயங்கள் பேச வேண்டும் என்றான்.

எயில் ஊர் ஆந்தையைத் திருமாறன் ஓர் சிறிது அறிவார். 'காத்திரு, நான் அவசரமாக அமுதவல்லிப் பிராட்டி இல்லம் செல்ல வேண்டியிருக்கிறது. திரும்பி வந்ததும் பேசுவோம்' என்று சொல்லிச் சென்றார் அவர்.