பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

91


வியாபாரி வருவதாக வாக்களித்திருந்ததால், முத்துக்களையும் இதர மணிகளையும் தரம் பிரிப்பதில் திருமாறன் இரவின் பெரும் பொழுதைச் செலவிட்டிருக்க வேண்டும்; அயர்ந்த தூக்கம் கண்ணிமைகளை அழுத்தத் தொடங்கவும் அவர் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று அவன் மனம் கூறியது. உண்மையும் அதுவே.

'எது எப்படி இருந்தால் என்ன? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும்' என்று அவனுடைய உள்ளுணர்வு உந்தியது. தற்காப்பு உணர்வு அவன் ஆற்றலுக்கு விழிப்பும் வேகமும் தந்தது. கள்ள வழி அவன் முன்னே திறந்து கொண்டது. போகிற போக்கில். அவன் அங்கு ஒரு பெட்டியிலிருந்த பொன் முடியையும் சிறிய வைர வாளையும் கண்டான். 'எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்' என்று கருதி உயிருக்காக ஓடும் சமயத்தில் அகப்பட்டதைச் சுருட்டிச் செல்வதே அறிவுடைமை எனச் செயலாற்றினான் ஆந்தை.

திருமலையின் பேச்சை விளையாட்டாக மதித்துவிட நினைத்த திருமாறன், மதிப்பு மிக்க பொருள்கள் அடங்கிய பெட்டியைக் காணமுடியாமல் போனதும் ஓலமிட்டார். இருவரையும் ஓடிச் சென்று ஆந்தையைத் தேடச் சொன்னார். ஆட்களை ஏவினார். அவரும், குட்டியை இழந்து விட்ட பூனை மாதிரி, அலறியவாறே அங்குமிங்கும் அலைந்தார்.

திருமாறனும் மருதுபாண்டியனும் பருந்துப் பார்வை எறிந்து ஆராய்ந்தனர். சுரங்க வழி எங்கு கொண்டுபோய் விடுகிறது என்று கண்டு, அங்கிருந்து தேடத் துவங்கினர்.