பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அன்னக்கிளி


ஆந்தை தப்பிச் செல்வதிலும் பதுங்கிக் கிடப்பதிலும் தேர்ந்தவன் என்பது அவ்விருவருக்கும் நன்கு தெரியும்.

'எயில் எனும் ஊரிலிருந்து வந்த ஆந்தை என்ற பெயருடைய அவன், பெரிய பெரிய கோட்டைச் சுவர்கள் மீதும் ஊர்ந்து செல்லும் ஆந்தைதான். இல்லையேல் மதுரையில் இருந்து மறைந்தவன் இவ்வளவு காலமும் எவர் கண்ணிலும் படாமல் வாழ்ந்திருக்க முடியுமா?' என்று திருமலைக்கொழுந்து குறிப்பிட்டான்.

முக்கிய இடங்களில் எல்லாம் தேடிய பிறகு இருவரும் துறைமுகத்தை அடைந்தனர். அங்கிருந்து புறப்படத் தயாராக இருந்த மரக்கலம் ஒன்றில் ஆந்தை போன்ற உருவத்தான் திடீரென்று எதன் பின்னோ மறைந்ததாக மருதுபாண்டியன் சொல்லவும், இருவரும் ஒரு படகில் ஏறி அம்மரக்கலத்தின் அருகே செல்வதில் ஆர்வம் காட்டினர். இதற்குள் திருமாறனின் ஆட்கள் கலத்தின் மீது ஏறியிருந்தார்கள்,

அப்பொழுதுதான் பிறர் எதிர்பார்க்க முடியாத செயல் நிகழ்ந்தது. ஆந்தை கலத்திலிருந்து கடலில் குதித்து வேகமாக நீந்தலானான். கரையை நோக்கி நீந்தாமல், எதிர்ப்புறமே சென்றான். பிறர் கண்ணெட்டும் தூரத்திலிருந்து அகன்று விட்டதும், அலையோடு நீந்திக் கரையில் வேறு எங்காவது ஏறிவிடலாம் என்ற நம்பிக்கையோடு தான் அவன் அவ்விதம் சென்றான்.

அவன் குதித்ததையும் கடல்மீது நீந்தித் தப்பி ஓட முயல்வதையும் கண்ட திருமலை தங்கள் படகை அவனை நோக்கிச் செலுத்தும்படி கட்டளையிட்டான்; எப்படியும்