11
அதில் எழிலியைத் தூக்கி வைத்துக்கொண்டு, விடியற்காலையில் அவர்கள் அன்னங்களாகி, தங்கள் அலகுகளில் வலையைப் பிடித்துக்கொண்டு பறந்து சென்றார்கள். அவள் அப்போது உறக்கத்திலிருந்தாள். கதிரவன் சுடர் அவள் முகத்தில் பட்டபொழுது, ஓர் அன்னம் அவளுக்கு நிழலாயிருக்கும்படி அவளுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்தது. அவள் கண்விழித்துப் பார்த்ததும், அக் காட்சியைக் கண்டுகொண்டாள். தனக்கு மேலே பறந்தது கடைசி இளவரசன் என்றும் யூகித்துக்கொண்டாள். அவனே அவளுக்காகச் சில கனியும் பறித்து வலையில் வைத்திருந்தான். அவள் அவனைப் பார்த்து முறுவல் செய்தாள்.
அன்னங்கள் பறந்து பறந்து நெடுந்தூரம் சென்றன. அவைகள் வழக்கம்போல் அதிக வேகமாகப் பறக்கமுடியவில்லை. ஏனெனில் அவைகள் அன்று எழிலியையும் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. புயல் ஒன்று வீசிற்று; இரவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மேல் திசையில் கதிரவன் இறங்கிக்கொண்டே யிருந்ததை எழிலி கவனித்தாள். இறங்க வேண்டிய பாறையும் கண்ணுக்குத் தெரியவேயில்லை. திடீரென்று இருட்டிவிட்டால், அவளும் சகோதரர்களும் நடுக் கடலில் விழ வேண்டியிருக்கும். தன்னால் தன் சகோதரர்களுக்கும் ஆபத்து விளையுமே என்று அவள் அஞ்சி நடுங்கினாள். அன்னங்கள் மேலும் அதிக வேகமாகப் பறந்து சென்றன.
கதிரவன் கடலின் விளிம்புக்கு இறங்கி விட்டான். சிறிது நேரத்தில் நீருள் பாதி மறைந்து விட்டான். அப்பொழுது அன்னங்கள் செங்குத்தாக கீழே விழுவது போல் இறங்கி, சிறிது தூரம் பறந்து சென்றன. அங்கே சிறிது வெளிச்சம் இருந்தது. எழிலியும் பாறையைக் கண்டு கொண்டாள். அவள் பாறையின்மீது இறங்கும்பொழுது சூரியன் ஒரு சிறு தாரகைபோல் தென்பட்டது. அப்பொழுது அவளுடைய . சகோதரர்கள் கைகளைச் சேர்த்துக் கொண்டு அவளைச் சுற்றி நின்றனர். பாறை அவர்கள் நெருங்கி நிற்பதற்கு மட்டும் போதுமானதாகயிருந்தது.
அலைகள் பாறையிலே மோதின. நீர்த் திவலைகள் அவர்கள் அனைவர் மீதும் தெறித்துக்கொண்டிருந்தன. வானம் செக்கச் செவேலென்று சிவந்து காணப்பட்டது. இடிகளும் உருண்டு கொண்டிருந்தன. எழிலியும் சகோதரர்களும் கைகோத்து நின்று இனிமையான