பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கண்டதும் அவர்கள் திடுக்கிட்டுக் கவலையடைந்தனர். தங்கள், சிற்றன்னை இழைத்த புதிய தீமைதான் இதற்குக் காரணமாயிருக் குமோ என்று அவர்கள் பயந்தனர். அவளுடைய கைகளைப் பார்த்த பின், அவள் தங்களுக்காக அப்படியிருக்கிறாள் என்று அவர்கள் யூகித்தனர். கடைசிப் பையன் அவள் அருகிலே சென்று அழுதான். அவன் கண்ணீர்த் துளிகள் பட்ட இடமெல்லாம் அவளுக்கு வலியில்லாமற் போயின; புண்களும் ஆறிவிட்டன.

இரவு முழுதும் எழிலி சட்டை பின்னிக்கொண்டிருந்தாள். சகோதரர்களைக் காப்பாற்றி முடியும்வரை அவள் எப்படி ஓய்ந்திருக்க முடியும்? மறு நாள் முழுதும் சகோதரர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் அவள் தனியே தன் வேலையை விடாமல் செய்து கொண்டிருந்தாள். நேரம் கழிவதே தெரியவில்லை; ஒரு சட்டை தயாராகி முடிந்தது; இரண்டாவது சட்டையை அவன் பின்னத் தொடங்கிய சமயத்தில், வெளியே வேட்டைக்காரருடையா கொம்பு ஊதும் ஓசையை அவள்கேட்டு நடுக்கமடைந்தாள். அவள் குகைக்குள்ளே ஓடிச்சென்று, தான் சேகரித்த முட் செடிகளை யெல்லாம் ஒரே கட்டாகக் கட்டி, அதன்மீது அமர்ந்து கொண்டாள். கொம்பின் ஒலி நெருங்கி வந்துகொண்டிருந்தது. வேட்டைநாய்களும் குரைக்கத் தொடங்கின; பெரிய நாய் ஒன்று குகையின் பக்கம் ஓடி வந்தது. அதைத்தொடர்ந்து மற்றொன்று. மேலும் ஒன்றாக நாய்கள் வந்து கொண்டிருந்தன! சிறிது நேரத்தில் வேட்டைக்காரர் சிலரும் குகைக்கு வெளியே காணப்பட்டனர். அவர்களில் மிகவும் அழகாகயிருந்தவன் தான் அந்நாட்டு அரசன். அவன் எழிலியிடம் நெருங்கிக் கவனித்தான். அவளைப்போன்ற அழகியை அவன் இதற்கு முன்பு கண்டதேயில்லை.

'அருமைப் பெண்ணே , நீ இங்கு எப்படி வந்து சேர்ந்தாய்?' சான்று அவன் கேட்டான். எழிலி தலையை ஆட்டினாள். பதில் பேசுவதற்கு அவளுக்குத் துணிவு வரவில்லை. அவளுடைய மௌனம்தான் சகோதரர்களின் உயிர்நாடி. அதை அவள் உணராத ஒரு விநாடி கூட இல்லை. தன் கைகளின் தழும்புகளை அரசன் பார்த்துவிடாதபடி அவள் கைகளை முன்றானைக்குள் மறைத்து வைத்துக்கொண்டாள். அரசன் அவளைப் பார்த்து; 'இனி நீ இங்கே யிருத்தல் தகாது; நீ என்னுடன் வந்துவிடு! உன் அழகைப் போல உன் குணமும்