17
'இது உனது பழைய குகை; இங்கே நீ நன்றாகக் கனவு கண்டு கொண்டிருக்கலாம். பழைய சூழ்நிலைகள் உனக்கு இன்பமளிக்கும்! என்று அரசன் கூறினன்.
தன் உள்ளத்திற்கு உவப்பான பொருள்களைக் கண்டதிலும், தனக்கு ஏற்ற சூழ்நிலை அமைந்ததிலும் எழிலிக்கு மனம் குளிர்ந்தது. அவள் ஒருவாறு புன்னகை செய்து, அரசனுடைய கையை மகிழ்ச்சியோடு முத்தமிட்டாள். அரசன் அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான். அவன் அவளே பட்டத்து இராணியாவாள் என்று முரசறையும்படி கட்டளையிட்டான்.
மதகுரு மட்டும் அவள் சூனியக்காரி என்று அடிக்கடி அரசனுக்கு அந்தரங்கமாக ஓதி வந்தார்; ஆயினும் அரசனுடைய மனம் அதை நம்ப மறுத்தது. திருமணம் நெருங்கிவிட்டது. மதகுருவே எழிலியின் தலையில் பொன் முடியைச் சூட்ட வேண்டியிருந்தது. அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அவர் கிரீடத்தை வைக்கும் பொழுது சிறிது பலமாக அழுத்தி வைத்தார். எழிலி அந்த வலியைப் பொறுத்துக் கொண்டாள். அவளுடைய துக்கமெல்லாம் தன் சகோதரர்களைப் பற்றியதுதான்; ஆகவே அவள் அழாமலிருந்தாள்.
நாள்தோறும் அவளுக்கு அரசன்பால் அன்பு பெருகிக் கொண்டிருந்தது. அவளுக்காக அவன் என்னென்ன ஏற்பாடுகள் செய்துவந்தான்! அவன் நல்லவன். அவளுக்கு நல்லவைகளையே செய்து, அவள் மகிழ்ச்சியடைவதையே அவன் நாடினான். அவளும் தன் சோகத்தின் காரணத்தை அவனிடம் விளக்கிச்சொல்ல வேண்டுமென்று விரும்பினாள். ஆனால் அவள் மெளனமாகவே இருக்க வேண்டியிருந்தது. ஆதலால் அவள் ஒவ்வோர் இரவிலும் தன் அறையில் தங்கி ஒவ்வொரு சட்டையாகப் பின்னி முடிப்பதில் ஈடுபட்டாள். ஏழாவது சட்டையைப் பின்னத் தொடங்கிய பொழுது நார் தீர்ந்துபோயிருந்தது. அவளுக்கு வேண்டிய முட்செடிகள் தேவாலயத்திற்கு அருகில் கல்லறைகளைச் சுற்றி ஏராளமாக வளர்ந்திருந்தன. ஒருவருக்கும் தெரியாமல் அவளே போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரவேண்டியிருந்தது.
ஓர் இரவில் நிலவு வீசிக்கொண்டிருக்கையில் அவள் தோட்டத்திற்குச் சென்றாள். மனம் பதறியது. ஏதோ தவறான வேலையைச் செய்வதுபோல் மனச்சான்று உறுத்திற்று. அவள் துணிந்து