28
இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்துகொண்டு அந்தரங்கமாகப் பேசத் தொடங்கினர். அவன் அவளுடைய கரிய கண்களைப் பற்றிக் கதைகள் கூறினான். அவைகள் ஆழங் காணாத அழகிய ஏரிகள் என்றும், அவைகளில் தேவ கன்னியர் விழுந்து நீங்திக் கொண்டிருந்தனர் என்றும் அவன் கூறினான். அவளுடைய பிறை நெற்றி பனிமலைபோல் ஒளிர்வதாக அவன் புகழ்ந்தான். நாரைகளைப் பற்றியும், அவைகள் அழகிய சிறு குழந்தைகளைத் தூக்கிச் செல்வது பற்றியும் அவன் கதைகள் கட்டினான்.
கதைகளும் கற்பனைகளும் இனியவைகளாக இருந்தன. பிறகு இளைஞன் மேலும் இனிய சொற்களால் தன் காதலை அவளிடம் தெரிவித்து, தன்னை மணந்து கொள்ள வேண்டினான். அவளும் உடனே 'சரி' என்று இசைவு தெரிவித்தாள்.
அவள் மேலும் கூறியதாவது: அடுத்த சனிக்கிழமை மாலை நீ இவிடம் வரவேண்டும். மாலை ஆறு மணிக்கு அரசரும் அரசியும் தேநீர் அருந்த இங்கே வருவார்கள். ஒரு தெய்வமே தங்கள் குமாரிக்குக் கணவனாக வரப் போவதை அறிந்து அவர்கள் எல்லையற்ற இன்பமடைவார்கள். அன்று நீ எங்களுக்கு ஓர் அருமையான கதை சொல்ல வேண்டும். இப்பொழுது முதலே நினைவில் வைத்துக் கொள்! என் தாய்க்கு உயர்ந்த நீதிக் கதைதான் பிடிக்கும். ஆளுல் என் தந்தைக்கு வேடிக்கையும் நகைச் சுவையும் நிறைந்த கதைதான் பிடிக்கும்.'
நல்லது, அந்தக் கதைதான் எனது திருமணப் பரிசு!' என்று சொல்லி அவன் அவளை அணைத்துக் கொண்டு கூறினான். அவர்கள் பிரியும் நேரத்தில் இளவரசி உடை வாள் ஒன்றை அவன் இடையில் கட்டி அனுப்பினாள். வாளின் உறையின் மேல் தங்கப் பவுன்கள் பதிக்கப் பெற்றிருந்தன. அந்த நேரத்தில் பவுன்கள் அவனுக்கு எவ்வளவு தேவை என்பது அவளுக்குத் தெரியாது.
அவன் வெளியே பறந்து சென்றான். முதலாவதாக நல்ல புதிய மேலங்கி ஒன்றை விலைக்கு வாங்கிக் கொண்டு. அவன் தன் வனத்தை அடைந்தான். சனிக்கிழமை சொல்ல வேண்டிய கதையைப் பற்றி அவன் சிந்தனை செய்யலானான். மற்ற வேலைகளைப் போல், கதை கட்டுவது அவ்வளவு எளிதான காரியமன்று.
சிறிது சிறிதாகக் கதை உருவாயிற்று. சனிக்கிழமை மாலைக்குள் முழுக் கதையும் அவன் மனத்தில் பதிந்து விட்டது.