பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஒருவன், 'அவன் தெய்வம்! அவனை நான் கண்ணாரக் கண்டேன். அவன் கண்கள் இரண்டு தாரகைகள்! அவனுடைய தாடி நுரையோடு கூடிய கடலைப் போலிருந்தது!' என்று வியந்து பேசினான். 'அனல் மயமான பட்டுத் துகிலில் அமர்ந்து அவன் பறந்து சென்றதை நான் கண்டேன்! அவனைச் சுற்றி ஒளிமயமான தெய்வக் குழந்தைகளும் இருந்தார்கள்!' என்று மற்றொருவன் உறுதியாகச் சொன்னான்.

இவ்வாறு மக்கள் பலபல விதமாக அவனைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள் அவனுடைய திருமணம் நடக்க விருந்தது. அந்நிலையில் அவன் தான் கேள்வியுற்ற அதிசயச் செய்திகளை அமுதம் போல் பருகினான்.

பொழுது விடியும் பொழுது அவன் வனத்திற்குச் சென்று தன் பெட்டிமீது அமர்ந்து புறப்பட வேண்டும் என்பதற்காகத் திரும்பினான். ஆனால் பெட்டி என்ன ஆயிற்று? அது எரிந்து சாம்பலாகக் கிடந்தது. இரவில் ஒரு வாணம் வெடிக்கும் பொழுது அதிலிருந்து ஓர் அனல் பொறி அந்த மரப் பெட்டியில் பற்றிக் கொண் டது. அவன் அதைக் கவனிக்காது விட்டு வைத்ததால், அது சிறிது சிறிதாகப் பரவி, பெட்டியையே எரித்துவிட்டது.

ஏழைக் காதலன் இனிமேல் பறக்க முடியாது; ஆகவே தன் எதிர்கால இராணியை அடையவும் முடியாது.

அவளோ, அன்று முழுதும் மாளிகை மாடியிலேயே அவனுக்காக நின்று கொண்டிருந்தாள். அவள் இன்னும் தான் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ, வீடு வாசல் இல்லாமல், உலகில் அலைந்து கொண்டிருக்கிறான். போன இடமெல்லாம் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் அந்தக் கதைகள் தீக்குச்சிகளைப் பற்றிய கதையைப் போல அவ்வளவு நல்ல கதைகளாக இருக்கவில்லை.