________________
அன்றாட வாழ்வின் உண்மைகளை, துன்பங்களை, இன்பங்களை ஒளிவு மறைவின்றிக் கற்பனை கலந்து வடிப்பதில் வல்லவனானான் இந்தப் பையன். அதிர்ஷ்டத்தைத் தேடிக் கிளம்பிய பையன் பெரியவனாகி ஊர் ஊராகக் கதை சொல்லும் நாடோடியாகத் திரிந்துகொண்டிருந்தான். அவனது வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதைகளாயின. இவருடைய முப்பத்தைந்தாவது வயதில் இவர் குழந்தைகளுக்காகச் சொன்ன அற்புதமான கதைகளின் முதல் தொகுப்பு வெளிவந்தது. குழந்தைகள் இவரது கதைகளை விரும்பிப் படித்தார்கள். இதுபோன்ற இனிமையான கதைகள் இன்னும் வேண்டும் என்று பிஞ்சுக் கரங்கள் நீண்டன. குழந்தை உள்ளம் படைத்த இவர் குழந்தைகளுக்கான கதை களை ஏராளமாக எழுதிக் குவித்தார். அவருடைய கதைகளைத்தான் அன்னப் பறவைகள் என்ற இந்தப் புத்தகத்தில் படிக்கப் போகிறீர்கள். இவரது விந்தைக் கதைகள், விசித்திரக் கதைகள், வினோதக் கதைகள், மனோகரமான கதைகள் ஐரோப்பிய மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க் கப்பட்டன. உலகத்துக் குழந்தைகளெல்லாம் இவரது கதைகளைப் படித்து விட்டு மனம்விட்டுச் சிரித்தன, கண்கலங்கின, விம்மிவிம்மி அழுதன. அந்தக் காலத்துச் சிறந்த பேனா மன்னர்களெல்லாம் இவரைத் தங்களில் ஒருவராகச் சொல்லிக் கொள்ளுவதில் பெருமைப்பட்டனர்.
பூட்ஸ் தைப்பவரின் மகனாகப் பிறந்து, உலகத்துக் குழந்தைகளின் முகங்களில் புன்னகை தவழவைக்கும் இறவாத கதைகளை உருவாக்கிய இவர்தான் ஆண்டர்ஸன். ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பது இவரது முழுப் பெயர். டென்மார்க்தேசத்தில் 1805-ம் ஆண்டு ஓடென்ஸி என்ற ஊரில் பிறந்தவர். இவரது வாழ்க்கையே ஒரு அழகான கதைபோலி ருக்கிறதில்லையா? இவர் கூறிய அற்புதமான கதைகளைச் சுவை குன்றா மல் அமரர் ப. ராமசாமி அவர்கள் அழகு தமிழில் இந்தப் புத்தகத்தில் தந் திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தேன்பாகுபோல் இனிக்கும். படிக்கப் படிக்கத் திகட்டாத இக்கதைகளைப் பார்த்துப் பார்த்து மகிழும்படியான படங்களுடனும் வெளியிட்டிருக்கிறார்கள் வானதி பதிப்பகத்தார். குழந்தைப் புத்தகங்களை எப்படி வெளியிடவேண்டும் என்பதை வானதி அதிபர் திருநாவுக்கரசு அவர்கள் நன்கு அறிந்தவர். ஏனென்றால் அவரும் குழந் தைகளுக்காக ஜில்ஜில்' என்று நிறைய எழுதி இருக்கிறாரே!
குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லுவதில் மன்னரான உலகப் புகழ் பெற்ற ஆண்டர்ஸனின் அற்புதமான கதைகள் உங்களை மகிழ்விக்க உள்ளே அழைக்கின்றன. அந்தக் கற்பனைக் கடலிலே மூழ்கித் திளைக்கத் தயாராக இருக்கும் உங்களை இனிமேலும் தடுத்து நிறுத்தமுடியாது.
வாண்டுமாமா துணை ஆசிரியர், கோகுலம்.