உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

 அல்லவா பார்க்க வேண்டியிருக்கிறது!' என்று அவர் அங்கலாய்த் துக்கொண்டார்.

உடனே அவர் உயர்குடிப் பிறந்த தம் அணுக்க ஊழியரை* அழைத்தார். அந்த ஊழியரே சக்கரவர்த்தியிடம் நெருங்க முடியும். அவர் தமக்குக் கீழ்பட்ட அதிகாரிகள் தம்மிடம் ஏதாவது கேட்டால், 'பியோ!' என்று சொல்லி, விரட்டிவிடுவார்; அதற்கு என்ன பொருள் என்றால், ஒன்றும் கிடையாது. அவர் கீழ்த் தரமானவர் களிடம் பேசத் தயாரில்லை என்று கொள்ளவேண்டும்.

அவரிடம் சக்கரவர்த்தி, இங்கே குயில் என்ற விசித்திரப் பறவை ஒன்று இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. என் இராஜ்யத்திலுள்ள எல்லாப் பொருள்களிலும் அதுவே சிறந்தது என்றும் நூல் வல்லவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதைப்பற்றி இதுவரை என்னிடம் ஏன் சொல்லப்படவில்லை?' என்று வினவினார்.

'அத்தகைய குறிப்பு எதையும் நான் பார்த்ததில்லை. குயில் எதுவும் இதுவரை நமது ராஜசபையில் அறிமுகம் செய்யப்பட்ட தில்லை !' என்று உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர் தெரிவித்தார்.

அது இன்று மாலை இங்கே வரவேண்டும், வந்து எனக்குப் பாடவேண்டும்! என்னிடம் என்ன பொருள் இருக்கிறது என்று உலகம் முழுவதும் தெரிந்திருக்கிறது, ஆனால் எனக்கு மட்டும் அது தெரியவில்லை!' என்றார் சக்கரவர்த்தி.

அதைப்பற்றி முன்பு யாரும் சொல்லியதில்லை. ஆயினும் நான் அதைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன்!'

ஆனால் குயிலை எங்கே தேடுவது? உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர் மாடிகளுக்கும் தரைக்குமாக ஓடிச் சாடினார். அறைகள், மண்டபங்களை யெல்லாம் துருவித் தேடினார். அவர் எத்தனையோ பேர்களைச் சந்தித்து வினவினார். குயிலைப்பற்றி ஒருவருக்குமே தெரியவில்லை. எனவே உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர் சக்கரவர்த்தியிடம் ஓடிச்சென்று, அது வெறும் கற்பனை யாகத்தான் இருக்கும் என்றும், மாட்சிமை தங்கிய மகிபாலர், நூலில் எழுதியதையெல்லாம் நம்பிவிடக் கூடாது!' என்றும் கூறினார்.


  • உயர்குடிப் பிறந்த அணுக்க ஊழியர்--சக்கரவர்த்தியின் அந்தரங்க ஊழியரான கனவான், இது அவருடைய காரணப்பெயராயிருந்து பட்டமும் ஆகிவிட்டது.