உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தார். இவ்வாறு பன்னிரெண்டு குழந்தைகளும் கவலையில்லாமல் இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் அந்த இன்பம் நீடித்திருக்க முடியவில்லை. முதல் மனைவி தவறிப் போயிருந்ததால், அரசர் வேறு ஒருத்தியை மணந்து, அவளைப் பட்டத்து இராணியாக்கிக் கொண்டார். அவள் மிகவும் கொடியவள். அரசருடைய குழந்தைகளிடம் அவளுக்கு அன்பே கிடையாது. இது, முதல் நாளிலேயே தெரிந்துவிட்டது. குழந்தைகள் வேடிக்கைக்காகத் தங்களுக்குள் விருந்து நடத்தி விளையாடுகையில் நிறையப் பணியாரங்களும் ஆப்பிள் பழங்களும் வைத்திருப்பார்கள். இராணியம்மாள் வந்த பிறகு, 'பணியாரங்கள், பழங்களுக்குப் பதிலாக ஒரு கிண்ணத்தில் மண்ணை வைத்துக் கொண்டு விளையாடுங்கள்! மண்ணையே பண்டங்கள் என்று பாவனை செய்து கொள்ளுங்கள்!' என்று கட்டளையிட்டாள்.

அடுத்தவாரம் எழிலி கிராமத்தில் ஒரு குடியானவன் வீட்டில் வசிக்கும்படி அனுப்பப்பட்டாள். பையன்களைப் பற்றி இராணி நாள்தோறும் சொல்லிவந்த பொய்யான தீய செய்திகளைக் கேட்டுக் கேட்டு, அரசர் அவர்களை எண்ணிப் பார்ப்பதேயில்லை.

கொடுமனம் படைத்த சிற்றன்னை அவர்களைப் பார்த்து, 'இனி நீங்கள் வெளியேறுங்கள்! உலகில் எங்காவது போய்ப் பிழையுங்கள்! நீங்கள் வாய் திறந்து கூவமுடியாத பறவைகளாக ஆகிவிடுவீர்கள்' என்று சபித்தாள்.

சகோதரர்கள் அனைவரும் அழகான பதினொரு அன்னப்பறவை வளாகிவிட்டனர். உடனே அங்கிருந்து அரண்மனைச் சாளரத்தின் வழியாக வெளியேறி, அவர்கள் பூந்தோட்டங்களையெல்லாம் தாண்டி, வனத்தை அடைந்தனர்.

அவர்கள் போகும் பொழுது, கிராமத்தில் எழிலி வாழ்ந்துவந்த குடியானவன் வீட்டுக் கூரைமீது சிறகடித்து வட்டமிட்டுப் பறந்தனர். அப்பொழுது வைகறை நேரமாயிருந்ததால், அவர்களை எவரும் கவனிக்கவில்லை. அவர்கள் வெகுதூரம் பறந்து செல்ல வேண்டியிருந்ததால், அங்கு அதிக நேரம் தங்க முடியவில்லை. கடைசியில் கடற்கரை ஓரமாயிருந்த ஒரு வனத்திற்குப் போய், அங்கே அவர்கள் தாங்கியிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/6&oldid=1054753" இலிருந்து மீள்விக்கப்பட்டது