பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

41

தொடர்ந்து செய்து வந்தார், பிராட்லாவுடன் சேர்ந்து பழையபடி சொற்பொழிவாற்றி வந்தார்.


அன்னியை அறியாதார் இங்கிலாந்து நாட்டிலே எவரும் இல்லை. அந்த அளவுக்குப் பிராட்லாவுடன் பணியாற்றி வந்தார். தலைசிறந்த பேச்சாளர்களிலே அன்னியும் ஒருவர்-என்ற பெயரைப் பெற்றிருந்தார்.


எவ்வளவுதான் சிறந்த பேச்சாளராக இருந்தாலும், பிராட்லர் அரசியல் பிற்போக்குவாதி என்ற பெயரைப் பெற்றுவிட்டார் காரணம், வளர்ந்துவரும் பொதுவுடைமை தத்துவங்கட்கு அவர் பரம விரோதி:


பொதுவுடைமைக் கொள்கைகளை வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம், அதை வன்மையாகத் தாக்கிப் பேசுவார். மார்க்சீயத் தொண்டர்களும் பிராட்லா கொள்கைகளைத் தாக்கிப் பேசுவார்கள். இருந்தாலும், பிராட்லா "நா" வன்மையிடம் அவர்கள் பேச்சு எடுபடவில்லை: தோல்வியே கண்டது.


வளர்ந்து வரும் எந்த கொள்கைக்கும் மக்களிடையே ஒரு புது மவுசு உண்டல்லவா? அதைப் பிராட்லா உணரவில்லை.


பொதுவுடைமை எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பிராட்லா வன்மையாகச் செய்து வருவதைக் கண்ட அவருடைய நண்பர்கள் பலர் அவரை விட்டுப் பிரிந்து போனார்கள். அவர்களிலே அன்னியும் ஒருவராக விளங்கினார்-ஏன்?


மார்க்ஸ் தத்துவங்கள் இங்கிலாந்து நாட்டிலே தோன்றி வளர்ந்தன: அங்கேதான் அந்த தத்துவங்களின் காரியாலயமும் இருந்தது.


எல்லாவற்றுக்கும் மேலாக, கார்ல்மார்க்ஸ்படமுடியாத துன்பங்களை அனுபவித்து லண்டன் மாநகரிலேயே மறைந்தவர்!