பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

77


அதே ஆண்டில் பெசண்ட் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்கள் தண்டனை பெற்றார்! அவருடைய புகழ் முன்பைவிடப் பன்மடங்கு உயர்ந்தது; போற்றாத தலைவரில்லை; தொண்டர்கள் அவரது புகழ் என்ற பலாச்சுளை மீது மொய்த்துக் கொன்டிருந்தார்கள்.

இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் காங்கிரஸ் கட்சி மிதவாதிகள் கூடாரமாகிப் போன பிறகு அதே விடுதலைக்காக ஐரோப்பிய நாட்டு வீராங்கனை ஒருவர் சிறை சென்றார் என்றால் என்ன சாதாரண விஷயமா இது மக்களும் பத்திரிகைகளும் மனமுவந்து பாராட்டின.

அன்னி சிறையிலே இருந்து மீண்டார்! ஆங்கில அரசு விடுதலை செய்தது: வெளியே வந்ததும் அன்னியின் புகழ் மங்க ஆரம்பித்தது. ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

காந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கித்தை அன்னி குறை கூறி விமர்சித்ததே காரணமாக அமைந்தது. அது கூட அவ்வளவு முக்கியமன்று; அந்த இயக்கத்தை எதிர்க்குமாறு தொண்டர்களையே தூண்டிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது! அதனால் அவர் புகழ் தேய்பிறையாக மாறியது.

காந்தியடிகள் பலகோடி மக்களின் பாசமிகுத் தலைவர் அல்லவா? அவரை எதிர்த்ததால், மீண்டும் அன்னி இழந்த செல்வாக்கை இறுதிவரைப் பெற முடியாமலேயே போய்விட்டார்-பாவம்!

அதற்காக அன்னி பெசண்ட் சளைத்துவிடவில்லை: தொடர்ந்து எனது பணி காந்தியடிகளை எதிர்த்துக் கொண்டிருப்பதே, என்ற சூழ்நிலையில் அவர் எதிர்த்துக் கொண்டே இருந்தார்!