பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அன்னை கஸ்தூரிபாயின்



திருமணமானதும் மனைவிமீது மிகுந்த பற்றும் அன்பும் கொண்டு இல்லற சுகத்தில் கவனம் செலுத்தியதால் கஸ்தூரி பாய்க்கு கல்விப் பயிற்சி கொடுக்கத் தவறிவிட்டார் காந்தி.

தனக்கொரு மனைவி சிறுவயதிலேயே கிடைத்துவிட்டதால் அதிகாரம் புரியும் மனமும், தனக்கு மனைவி எல்லா வகையிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடக்கத்தான் வேண்டும் என்ற ஆதிக்கமும் காந்தியடிகளுக்கு இருந்தது.

இந்தப் போக்கு இருவரையுமே சில நாட்கள் பகல் நேர ஊமைகளாக்கி விட்டது. ஆனால் இரவு நேரங்களில் இருவருமே ஊமை களைந்து ஒரே ஓட்டிற்குள் ஆமைகள் புகுவது போல் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில் தான் காந்தியை சில சமயங்களில் கட்டுப் பாட்டுடன் நெறிப்படுத்திய பெருமையும் பெற்றிருந்தார், கஸ்துரி பாய்.

உயர்நிலைப் பள்ளியில் காந்தி படித்துக் கொண்டிருந்தார். அப்போது தீய குணங்களையுடைய நண்பன் ஒருவன் அவரிடம் நட்புக் கொண்டு பல கெட்ட பழக்கங்களை காந்திக்குக் கற்பித்து வந்தான்.

பிறரிடம் கேள்விப்பட்ட அவனது தீச் செயல்களைக் கேட்டு, காந்தியின், அன்னை அவரை எச்சரித்தார்; அவரது தமையனும் கண்டித்தார்; இறுதியாக மனைவி கஸ்தூரிபாயும் கடுமையாக அறிவுரை கூறினார்:

இம் மூவரின் புத்திமதியைக் காந்தி கேட்காமல், 'நான் நல்லவனாக நடந்தால் என்னை யாரும் கெடுக்க முடியாது. என் மனம் மற்றவரை உணரும் திறன் பெற்றது', என்று கூறியபடியே அவனிடம் நெருங்கிப் பழகினார்!