பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11


 இதைக் கண்ட கஸ்தூரிபாயும், சற்றுக் கடுமையாகவே கணவனைக் கண்டித்து அறிவுரை கூறினார். இதைப் பார்த்த காந்தி, கணவனுக்கே புத்திமதி கூறிடும் தகுதி மனைவிக்கு உண்டா? யார் கொடுத்த அதிகாரம் உனக்கு? அந்தத் தகுதி எப்படி வந்தது? என்றெல்லாம் ஆணாதிக்கத் தொனியில் கஸ்தூரி பாயைக் கேட்டார். இருந்தும், மனைவி கணவனை அடிக்கடி எச்சரித்தவாறே இருந்தார்.

இறுதியாக அந்தத் தீயவன் கஸ்தூரிபாயின் கற்பொழுக்கம் மீதே சந்தேகத்தை உருவாக்கிவிட்டான் காந்திக்கு! அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா? அதனை நம்பி, மனைவி கஸ்தூரி பாய் நடத்தையிலேயே ஐயம் கொண்டு துன்புறுத்தினார் காந்தி.

கஸ்தூரி பாய்க்கு, அந்த நேரத்தில் நண்பனின் வார்த்தைகளை நம்பிச் செய்த கொடுமைகளை காந்தியடிகள் தனது சுயசரிதையில் கீழ்க் கண்டவாறு எழுதியுள்ளார். உண்மையை உணர்பவன் தானே உத்தமமான மனிதன்? காந்தி அடிகள் எழுதுவதைப் படியுங்கள்:

"நான் நண்பன் கூறிய சந்தேகத்தை நம்பியதால் என் மனைவிக்குச் செய்த கொடுமைகளை இப்போது எண்ணும் போதும், என்னை நானே மன்னிக்க முடியவில்லை.

"இத்தகைய கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளப் பாரதப் பெண்களைத் தவிர வேறு யாரால் முடியும்? இந்தியப் பெண்கள் பொறுமையின் வடிவம் என்று நான் கூறுகிறேன்.

"ஏனென்றால், குற்றம் செய்யாத ஒரு வேலைக்காரனைக் கண்டித்தால் அவன் வேலையைத் துறக்க முடியும். மகனும் அவ்வாறே தனது தந்தையைப் பிரிய முடியும்; மனைவிக்கு கணவன் மீது சந்தேகம் உண்டானால் மெளனமாகப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால், கணவனுக்கு