பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

47


கொள்ளலாம் என்று தனது தீர்மானத்தின் முடிவை மனைவியிடமும், பிள்ளைகளிடமும் காந்தியடிகள் விவரித்தார்.

அவரது பிள்ளைகள் இருவரும் அப்பாவின் கருத்தை ஒப்புக் கொண்டார்கள். ஆனால், கஸ்தூரிபாய் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. "உங்களுக்கும், பிள்ளைகளுக்கும் நகைகள் தேவையில்லை. நீங்கள் சொல்கிறவாறு பிள்ளைகள் சரி என்று கூறலாம். ஆனால், நான் பரிசாக வந்த நகைகளைக் கூடவா அணிந்து கொள்ளக் கூடாது?" என்ற கேள்வியை எழுப்பினார்.

காந்தியடிகள் இதற்கு மெளனமாக இருக்கும்போது, மீண்டும் கஸ்தூரிபாய், "சரி நான் நகைகளைப் போட்டுக் கொள்ளவில்லை. என் பிள்ளைகளுக்குத் திருமணமாகி, மருமகள்கள் வந்தால் என்ன செய்கிறது? அவர்களுக்கு வேண்டாமா நகைகள்? மக்கள் கொடுத்த பொருட்களை நான் திருப்பித் தர மாட்டேன்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் கணவரிடம்!

அப்போது காந்தி முன்புபோல் கோபப்படாமல் அமைதியாக, "பிள்ளைகளுக்கு எப்போதோ திருமணமாகப் போகிறது; அவர்கள் பெரியவர்களான பிறகு, அந்த நேரத்தில் அந்த வேலையை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். அதே நேரத்தில் நகைப் பைத்தியமுள்ள மருமகள்களை நாம் நமது வீட்டிற்குக் கொண்டு வர மாட்டோம். அப்படிப்பட்ட பெண்களை நமது பிள்ளைகளுக்கு மணம் செய்தும் வைக்கமாட்டோம். அவர்களுக்கு நகைகள் அணிய வேண்டிய ஆசைகள் இருந்தால் அதை நான் கவனித்துக் கொள்கிறேன். அப்போது நீ என்னைக் கேள்" என்றார்.