56
அன்னை கஸ்தூரிபாயின்
கூற முடியாது. இந்தத் தண்டனை முழுவதையும் அவர் அனுபவித்து முடிப்பதற்குள், நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக முயன்றால், அவருடைய தண்டனையைக் குறைத்துச் சிறையிலிருந்து அவரை விரைவில் மீட்க முடியும் என்று உணருகிறேன். அதனால் ஆறுதலும் அடைகிறேன்.
இந்திய மக்கள் விழிப்புற்றுக் காங்கிரசின் வேலைத் திட்டங்களை முழு மனத்துடன் நிறைவேற்ற முன் வருவார்களானால், நாம் அவரைச் சிறையிலே இருந்து மீட்பதுடன், பதினெட்டு மாதங்களாக நாம் எந்த எந்த விஷயங்களுக்காகப் போராடித் துன்பங்களை ஏற்று வருகிறோமோ, அவைகளிலும் நாம் வெற்றி காண முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பரிகாரம் நம்மிடந்தான் உள்ளது. இந்தப் போராட்டம் தோல்வி கண்டால் அந்தக் குற்றம் நம்மையே சாரும். ஆகையால், என்னிடம் அனுதாபம் காட்டவும், என் கணவரிடம் மதிப்புச் செலுத்தவும், காங்கிரசின் திட்டங்களில் கவனம் முழுவதும் செலுத்திப் போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும், பெண்கள்-ஆண்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
என் கணவருடைய திட்டத்தில் பலவேலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகளுள் சர்க்காவும், கதரும் முக்கியமானவை. இந்த இரு விஷயங்களிலும் நாம் வெற்றி பெற்றால் இந்தியப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குச் சிறப்பான உதவிகள் கிடைக்கும்; நம் அடிமைத்தனமும் நீங்கும். ஆகவே, காந்தியடிகளின் நிர்மாணத் திட்டத்துக்கு இந்திய மக்கள் கீழ்க் கண்ட உதவியை அளிக்க வேண்டும்.
1. ஆண், பெண் அனைவரும் அயல்நாட்டுத் துணிகளை ஒழித்துக் கதர் கட்ட வேண்டும். மற்றவர்களையும் அணியுமாறு தூண்ட வேண்டும்.