உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

59


கொண்டதால், பர்தோலி மாஜிஸ்திரேட் அன்னைக்கு ஆறுவாரம் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளித்தார்! அந்தத் தண்டனையையும் ஏற்று அன்னை சிறை புகுந்தார்! எனவே, அண்ணல் நாட்டு நலனுக்காக எந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அந்த அறப்போரில் அன்னையும் முந்திக் கொண்டு வந்து கலந்து கொள்வார்.

அலகாபாத் சபர்மதி ஆசிரமத்தை அண்ணல் 1933-ஆம் ஆண்டு கலைத்துவிட்டார். பிறகு 'வார்தா' என்ற நகர் அருகே, 'சேவா கிராமம்' என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி அங்கே ஓர் ஆசிரமத்தை அமைத்து அதிலே வசித்து வந்தார் காந்தியடிகள் அந்த ஆசிரமத்துக்கும் அன்னை கஸ்துரிபாய் தான் ஆசிரமத் தலைவி, நிர்வாகி!

சேவா கிராமத்திற்கு வருகை தரும் எண்ணற்ற வருவோர், போவோர், விருந்தினர் அனைவரையும் உபசரிக்கும் தாயாகத் திகழ்ந்து அவர்களுடன் தனது பாசத்தையும், மனிதநேய அன்பையும் காட்டிப் புகழ் பெற்றார் கஸ்தூரிபாய்!

காந்தியார் தேச விடுதலைப் போராட்டம், ஆன்மீக உணர்வு, அரசியல் ஆலோசனைகள், ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டு இந்திய விடுதலைப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார்! கஸ்தூரிபாய், காந்தி மேற்கொண்ட அத்தனை பணிகளுக்கு அப்பாலும் பணியாற்றி வந்தார்! ஆசிரமத்தின் எல்லாப் பணிகளையும் தானே நிர்வகித்து எந்த விதக் குறைகளாவது ஏற்பட்டுவிட்டால் அது அடிகளுக்கும் நாட்டுக்கும் அவப் பெயரை உண்டாக்கி விடுமே என்ற எச்சரிக்கையுடனும், அச்சத்துடனும், அடிகளால் ஆற்ற முடியாத, இயலாத, நெருக்கடிகளால் நேரமில்லாத தேசத்தொண்டுகளை அண்ணலையும் மீறி செய்து நற்புகழ் பெற்றிருந்தார்.