பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அன்னை கஸ்தூரிபாயின்



டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையார், ஒரு புத்தகத்தில் அன்னை கஸ்தூரிபாயைப் பற்றி எழுதும் போது:

"கஸ்தூரிபாயைப் பற்றி அதிகமாக எவரும் பாராட்டி எழுதியது இல்லை. ஆயினும் இந்திய அரசியல் என்றதும், காந்தியடிகள் தொண்டுகள் அல்லது காங்கிரஸ் தேசிய இயக்கச் சேவை, அல்லது போராட்டம் இவற்றில் எவையாயினும் சரி, அவற்றில் கஸ்தூரி பாய் தொண்டுகளை, சிறைவாசங்களை, போராற்றல் உணர்ச்சிகளை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இது ஓர் உணர்ச்சி வரலாறாகும். எந்தத் தலைவர்களுக்கும் அவர் சளைத்தவரல்லர்! குறிப்பாக, சேவா கிராமத்தின் உயிரோட்டமே கஸ்தூரி பாயிடம் தான் இருக்கிறது. அந்த ஆசிரமத்தின் எந்தத் திக்கை நோக்கினாலும் சரி, அவரின் தியாகமே மனம் வீசுகின்றது. அவருடைய பொறுமையும், மற்றவர்களின் தேவைக்கு ஏற்றவாறு அவரவர் இயல்புகளை அறிந்து சேவை செய்யும் ஆற்றலும், அந்த ஆசிரமத்திற்கே பெருமை அளிக்கின்றன.

"பாரத நாடு போற்றிப் புகழ்கின்ற சுபாவங்களுக்கு, பண்புகளுக்கு உறைவிடமான அன்னை கஸ்தூரிபாய், மிக மிக உயர்ந்தவர். அவர் இந்த நாட்டுக்கு வழங்கிய விலை மதிப்பற்ற பரிவு, கருணை, அன்பு, இரக்கம், மனிதநேயம், சேர்ந்து பழகும் பாச உணர்வு அனைத்திலும், அவருடைய கணவர் மகாத்மாவினால் நாம் பெறும் எல்லா நன்மைகளிலும் மெளனமான பங்காளி கஸ்தூரிபாய் ஒருவரே என்று அந்த அம்மையார் எழுதியுள்ளார்.

அதனைப் போலவே, ஆசிரமத்தில் வாழ்பவர்களுக்கும், வருவோர் போவோர்களுக்கும், குறிப்பறிந்து பணியாற்றும் உயர்ந்த ஓர் இல்லறத் தலைவி அன்னை கஸ்தூரி பாய் தான் என்றால் அது ஒன்றும் அதிகபட்சமான அளவுகோல் ஆகாது