உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

69


திணறிப்போய் இருப்பார். ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்ததும் தினசரிகளில் உன்னைப் பற்றி என்ன செய்திகள் வருமோ என்ற அச்சத்தினால் எனது நெஞ்சு நடுங்குகின்றது.

"சில சமயம் நீ எங்கிருக்கிறாயோ, எங்கு தூங்குகிறாயோ, என்ன உண்ணுகிறாயோ என்று கவலைப் படுகின்றேன். ஒருவேளை நீ, அனாசாரமான உணவுகளையும் சாப்பிடத் தொடங்கி இருக்கலாம். இவ்வாறெல்லாம் எண்ணி இரவெல்லாம் தூக்கம் இழந்து துன்புறுகிறேன். ஆனால், உன்னை எங்கே பார்க்க முடியும் என்றும் தெரியவில்லை. நீ என்னுடைய மூத்த மகன், உனக்கு ஐம்பது வயதாகி விட்டது. உன்னை நேரில் பார்த்தால் என்னையும் அவமதித்து விடுவாயோ என்று எனக்கு அச்சமாகவும் இருக்கிறது.

"உன்னுடைய மூதாதையரின் மதத்தை நீ துறந்ததின் காரணம் எனக்குப் புரியவில்லை. அது உன் சொந்த விஷயம். ஆனால், ஒரு மாசும் அறியாத பாமர மக்களை ஏமாற்றி இச்சகம் பேசி உன்னைப் பின்பற்றும்படி தூண்டுகிறாய் என்று அறிகிறேன். உனக்கு மதத்தைப் பற்றி என்ன தெரியும்? உன்னுடைய மனநிலையில் மற்றவர்களுக்கு நியாயம் கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? உனது தகப்பனார் பற்றிப் பேச உனக்குச் சிறிதும் தகுதி கிடையாது. இவ்வாறு நீ ஒழுகினால், விரைவில் எல்லோரும் உன்னை வெறுத்து ஒதுக்கும் நிலையை அடைவாய். வழி தவறியுள்ள உன் மனத்தை நேர் வழியில் திருப்பு. இது எனது வேண்டுகோள்.


”நீ மதம் மாறியதை நான் விரும்பவில்லை. ஆயினும், 'நன்னெறி செல்லவே மதம் மாறினேன்' என்று நீ அறிவித்த போது, மத மாற்றங்கூட நல்லது தான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தேன். இனி நீ ஒழுக்கம் தவறாமல் வாழ்வாய் என்று