பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அன்னை கஸ்துரிபாயின்


இருந்தது அன்று இரவுதான். அந்த இரவிலே நண்பர்களும், சுற்றத்தாரும், எனது தந்தையும் அம்மாவுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார்கள்.


"ஏதாவது கேள்வி கேட்டால், அம்மா அரைகுறை நினைவோடு ஒரே வார்த்தைதான் பதில் கூறுவார். அதுவும் இயலாத போது தலையை மட்டும் ஆட்டுவார். ஒருமுறை அப்பா அருகில் சென்று உட்கார்ந்த போது, அம்மா கைகளைத் தூக்கி அவர் யார்? என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டார்.

"அம்மா அருகிலே இருந்து சில பணிகளைச் செய்ததன் மூலம் அப்பா ஓர் ஆறுதல் கிடைத்தது போலக் காணப்பட்டார். அம்மாவுக்கு அருகில் இருந்த அப்பா, அப்போது சில ஆண்டுகள் குறைந்து விட்ட வயதினரைப் போலத் திகழ்ந்தார். ஆனால், அப்பா கைகள் மட்டும் நடுங்கிக் கொண்டே இருந்தன.

"அந்த சமயம், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனது நினைவுக்கு வந்தது. அப்போதுதான் எனது தாயார் சிறையிலே இருந்து வெளியே வந்தார். உடல் நலம் மிகவும் மோசமாக இருந்தது. எனது பெற்றோருக்கு அறிமுகமான ஓர் ஐரோப்பியர் இவர்களை ரயில்வே நிலையத்தில் சந்தித்தார். 'மிஸ்டர் காந்தி இவர் உங்கள் தாயாரா?' என்று அப்பாவைப் பார்த்து, அம்மாவைக் காட்டிக் கேட்டார்.

"பொழுது விடிந்தது. அன்னையின் உடல் நிலை முன்பு இருந்ததை விட, கவலை தருவதாக இருந்தது. என்றாலும். அம்மா அமைதியாக இருந்தார். திங்கட்கிழமை எப்படியும் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. செவ்வாய்க்கிழமை 'பகவான் விட்ட வழி' என்று சரணாகதியாகி விட்டார்.