பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அன்னை கஸ்தூரிபாயின்


ஆசிரமப் பிரார்த்தனைக் கூட்ட வழிபாடுகளிலே கலந்து கொண்டு, மீண்டுமோர் கோழி உறக்கம் செய்து சிலிர்த் தெழுவார்

ஆசிரம வாசிகளுடன் கலந்து பணிகளைப் பகிர்ந்து செய்வார்; சமையல் வேலைகளை மேற் பார்வையிடுவார்; அடிகளுக்குரிய சிற்றுண்டி தயாரானதும், உடனே தனது அறைக்கு அதைக் கொண்டு போய் பாதுகாப்புடன் வைத்து, அடிகள் உண்ணும் நேரம் வந்ததும் அவருக்குப் பரிமாறி விட்டு அவர் அருகிலேயே அமர்ந்து இவரும் உண்பார்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ ராமாயணம், கீதை போன்ற நூல்களைப் படிப்பார். மறுபடியும் மகாத்மாவின் மதிய உணவுக்கு வேண்டியவற்றைக் கண்காணித்து, அடிகளுக்கு அமுது படைத்து, தானும் உண்பார்.

கணவர் மீது ஓர் ஈ கூட அமரக் கூடாது. ஒருவுேளை ஈ அமர்வதை அவர் பார்த்து விட்டால் போதும், உடனே கைக் குட்டையாலோ, விசிறியாலோ அதை ஒட்டுவார். காந்தியடிகள் காலடியில் அமர்ந்து கால்களை வருடுவார். அதற்குப் பிறகுதான் தனக்கு கிரமப்பரிகாரம் செய்து கொள்வார்.

காலையில் எழுந்தவுடன் ராட்டையில் நூல் நூற்பார்; எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதை மட்டும் நிறுத்த மாட்டார் கஸ்தூரிபாய், ஏனென்றால் தான் நூல் நூற்பு வேலையை தவறாமல் ஒழுங்காகச் செய்தால், கணவரின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்; நூல் நூற்றலின் நுனியில்தான் இந்திய நாட்டின் விடுதலை இருப்பதாகக் அடிகள் அடிக்கடி மக்களுக்கு அறிவிப்பதால், அதனைக் கஸ்தூரிபாய் தவறாமல் செய்து வந்தார்.