அன்பழைப்பு
9
இந்த நிலை நிரந்தரமாகவேண்டும் என்பதற்காகவே, எமது பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது!
வியாபாரிகளின் வேதனையைத் துாண்டிவிட்டு, மாணவர்களிடையே எாிச்சலை அதிகமாக்கி, ஆசிரியர்களின் அல்லலைக் காட்டி, தொழிலாளர்களின் துயரத்தைப் பெரிதாக்கி, வோட்டுக் கணக்கெடுக்கும் அரசியல் கட்சிகளிலே நாங்கள் சேராதவர்கள்!
அரசியல் குட்டையிலே மீன்பிடிக்க வலை வீசுபவர்களல்ல நாங்கள்!
சந்தேகமிருந்தால் நன்றாகப் பாருங்கள் வலை எங்கள் கையிலிருக்கிறதா என்று.
'அரசியல் கட்சிகளின் ஆசாபாசங்களுக்கு இறையாகி விடாதிர்கள்' என்று உழவா் மக்களுக்கு ஏன் அவர் வலியுறுத்தினார்? காரணம் ஏழை விவசாயிகள் படிப்பற்றவர்கள். ஆகவே அவர்கள் மனதை மயக்கி விடலாம் அரசியல்கட்சிகள் — சிறிய முயன்றால். இந்தக் கருத்திலேதான், அவர் சொன்னார். ஆனால், ஒன்று. இந்நாட்டு விவசாய மக்களுக்கு கதிா் எது, பதர் எது என்று பகுத்தறியும் சக்தி அதிகம். ஆகவே வலையிலே வீழ்ந்து பலியாகிவிடமாட்டார்கள். அவ்வளவு எளிதில்!
இன்று, பல கட்சித் தலைவர்கள் இங்கே கலந்து கொண்டாலும், ஒரு உண்மை மட்டும் வெளிப்பட்டு விட்டது. அந்த உண்மையை எல்லோரும் எடுத்துக்காட்டினர். அதாவது உழவரிடம் திருப்தி இல்லை!