பக்கம்:அன்பழைப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அண்ணாவின்



புதுமைகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்ற அக்கரை நமது மக்களுக்கில்லை. கேட்டுப் பாருங்கள். 'ஓமந்தூர்' எங்கே இருக்கிறது? ஓமந்தூராா் இருக்கிறாரே. அவருக்கு எத்தனை குழந்தைகள்? மனைவியார் இருக்கிறார்களா? என்று, 'தெரியாது-தெரியாது' என்றே பதில் சொல்வார் கிராமவாசி. அதே கிராமவாசியைக் கேளுங்கள், கைலாசம் எங்கே இருக்கிறது? - உடனே காட்டுவாா் ஆகாயத்தை, ஏதோ போய்ப் பார்த்து விட்டு வந்தவர்போல. 'பரமசிவனுக்கு எத்தனை குழந்தைகள்?" கேட்டுப் பாருங்கள் அவரை, ஏதோ, இவர் வீட்டுப் பக்கத்தில் தான் பரமசிவன் குடியிருப்பது போல இரண்டு குழந்தைகள், மூத்தவர் விநாயகர் - இளையவர் சுப்பிரமண்யன் என்று சொல்லுவார். அவரை நமது மாகாணத்தின் வருமானம், செலவு பற்றிக் கேளுங்கள், விழிப்பார்!, உடனே நமது மாயலோக வரவு செலவைக் குறித்து வைத்துக் கொள்ளும் 'சித்திரகுப்தன்' பற்றிக் கேட்டால், கனைத்துக் கொண்டு பேசத் துவங்குவார்!

இது தேவையா, அது தேவையா என்பது கூட அல்ல நான் கேட்க விரும்புவது, கண்ணிற்காணமுடியாதவைகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் உள்ள அக்கரை, நமக்கு நன்மை தரும் விஷயங்களைப் பற்றித்தெரிந்து கொள்வதில் மட்டும் ஏன், இல்லை?

இந்த நிலை நீடித்தால், பொது அறிவு பரவுமா, பிற தேசங்களுக்கு ஒப்பாக நமது மக்களும் முன்னேறத்தான் முடியுமா? அல்லது நாம் எப்போதும் போல இருந்து விடுவதென்பது தான் இயலுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/19&oldid=1502012" இலிருந்து மீள்விக்கப்பட்டது