அன்பின் உருவம்
பெரிய கூட்டம் இறைவனுடைய திருமுன் அவனுடைய ஆரருளைப் பெறவேண்டுமென்ற ஆசையாலே கூடிய கூட்டம் அது. எல்லோரும் சிவ சின்னங்களை அணிந்திருக்கிறார்கள். நெற்றியிலே திருநீறு, உடம்பெல்லாம் திருநீறு. கழுத்திலும் தலையிலும் உருத்திராட்ச மாலை. கைகளைத் தலைமேல் வைத்துக் குவித்துக்கொண்டிருக் கிறார்கள். சிவபெருமானுடைய திருநாமங்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிருர்கள். போற்றி, போற்றி என்று வணங்குகிறார்கள். சய சய என்று வாழ்த்துகிறார்கள்.
இந்தக் கூட்டத்தோடு சேராமல் இரண்டு பேர் தனியே நிற்கிறார்கள். அவர்கள், கூட்டத்தில் உள்ள சிவநேசச் செல்வர்களைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
'ஆ ! எவ்வளவு பெரியவர்கள்! இவர்களிடத்தில் உள்ள சிவ பக்தியை என்னவென்று சொல்வது!" என்று ஒருவர் வியந்து பேசினர். அந்த இருவரில் அவர் இளைஞர்; மற்றவர் முதியவர். -
இளைஞர் கூறியதைக் கேட்டு முதியவர் முறுவல் பூத்தார்; "நீ எப்படி அறிந்தாய்?" என்றார்.
'அவர்களுடைய கோலமும் கையைத் தலைமேல் குவித்திருக்கும் நிலையும் இறைவனை வாழ்த்துகின்ற வாழ்த்தும் அவர்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றனவே! அவர்களைப் பார்த்தாலே அன்பின் உருவங்களாகக் காட்சி அளிக்கிறார்களே!"