பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

37

"அதுவும் எனக்கு ஞாபகமில்லை!”

"கையை முதலில் பிடித்தது யாரடி, நீயா அவரா?”

"அதுவும் எனக்கு ஞாபகமில்லை; அப்புறம்?"

"சரிதான்! மல்லிகை தந்த மணத்திலே, மாப்பிள்ளை தந்த சுகத்திலே உன்னை நீயே மறந்து விட்டாயாக்கும்?”

"ஆமாம். என்னை நானே மறந்துவிட்டேன்; அவரை அவரே மறந்துவிட்டார். அப்புறம் என்ன தெரியவேண்டும் உங்களுக்கு?"

"ஒன்றுமில்லை; அவருடைய கன்னத்தையாவது நீ சும்மா விட்டாயா என்று தெரிந்தால் போதும்!”

"அதை நான் சொல்வானேன், நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டு, நான் குளிக்கும் அறைக்குள் நுழைந்தேன்.

அதற்கேற்றாற் போல் என்னைத் தொடர்ந்து அவர் எழுந்துவரவே, எல்லோரும் அவரை நோக்கித் திரும்பினார்கள்.

அவ்வளவுதான்,'கலகல’வென்ற சிரிப்பொலி அவர்களிடையே எழுந்தது.

ஒன்றும் புரியவில்லை அவருக்கு; திரு திருவென்று விழித்தது விழித்தபடி நின்றார்.

"அநியாயம் என்றாள்!” ஒருத்தி.

"அநியாயத்திலும் அநியாயம்!” என்றாள் மற்றொருத்தி.

அ,-3